Paristamil Navigation Paristamil advert login

ம.பி.யில் மீண்டும் ஆட்சி.. பா.ஜ.க.!!

ம.பி.யில் மீண்டும் ஆட்சி.. பா.ஜ.க.!!

3 மார்கழி 2023 ஞாயிறு 20:11 | பார்வைகள் : 2254


பாஜக ஆட்சியில் உள்ள மத்திய பிரதேசத்தில் கடந்த மாதம் 17ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 116 தொகுதிகளில் வென்றால் ஆட்சியமைக்கலாம் என்ற நிலையில், இந்த மேஜிக் நம்பரை தாண்டி ஆளுங்கட்சியான பாஜக அதிக தொகுதிகளை பிடிப்பது உறுதியாகிவிட்டது. இதன்மூலம் 5-வது முறையாக மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது.

பாஜகவின் இந்த வெற்றிக்கு தலைவர்களின் சூறாவளி பிரசாரம் மட்டுமின்றி, பெண்களின் வாக்குகளை உறுதி செய்த லாட்லி பெஹ்னா யோஜனா என்ற திட்டமும் முக்கிய பங்காற்றியிருக்கிறது. 

ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடையே நிலவுவதாகவும் அதன் பயன் காங்கிரஸ் கட்சிக்கு செல்லும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கணித்திருந்தனர். ஆனால், தேர்தல் முடிவு அவை அனைத்தையும் பொய்யாக்கி விட்டது. 

ம.பி.யில் பா.ஜ.க.விற்கு ஆதரவாக அதிகளவில் பெண்கள் வாக்களித்ததாகவும் அதற்கு காரணம் லாட்லி பெஹ்னா யோஜனா (ladli behna yojana) எனும் திட்டம்தான் எனவும் சில அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

தேர்தல் முடிவுகளில் இத்திட்டத்தின் தாக்கம் இருப்பதாக மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கூறியிருக்கிறார்.  லாட்லி பெஹ்னா திட்டம் ஒரு கேம் சேஞ்சர் என்றும் அதற்கான முழு பெருமையும் முதல்-மந்ரிரி சிவராஜ் சிங் சவுகானை சேரும் என்றும் பாராட்டியிருக்கிறார்.

லாட்லி பெஹ்னா திட்டம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் லாட்லி பெஹ்னா திட்டம் கடந்த மார்ச் 5 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி, பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களின் வங்கிக் கணக்கில் மாநில அரசாங்கத்தினால் ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது. அதன்பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த உதவித் தொகை ரூ.1,250 ஆக உயர்த்தப்பட்டது. குறிப்பிட்ட கால இடைவெளியில் படிப்படியாக உயர்த்தப்பட்டு, ரூ.3,000 வரை இந்த நிதியுதவி உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார்.

இந்த திட்டத்திற்கான உதவித் தொகை மேலும் உயர்த்தப்படும் என அரசு அறிவித்ததால், ஆளும் பாஜகவின் வெற்றிக்கு இந்த திட்டம் முக்கிய பங்காற்றியிருக்கிறது. உதவித் தொகை உயரும் என்பதால் பயனாளர்களும் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த திட்டத்தின் நோக்கம். பெண்கள் தங்கள் உடல்நலம் மற்றும் தங்கள் குழந்தைகளின் உடல்நலத்தை மேம்படுத்த பால், கனி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க உதவுவதுதான். இத்திட்டத்திற்கு அடுத்த சில வருடங்களில் ரூ.60 ஆயிரம் கோடி வரை செலவிடப்போவதாக ம.பி. அரசு கூறியது. 

திட்டத்தில் சேர தகுதிகள்

ம.பி.யில் நிரந்தரமாக வசிக்கும் பெண்கள் மட்டுமே இதற்கு பயனாளியாக தகுதி பெறுவார்கள். இதற்கான மனு அளிக்கும்போது அப்பெண் 21 வயதிற்கு குறையாமலும் 60 வயதை கடக்காமலும் இருக்க வேண்டும். கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. மேலும், பயனாளிகள் வருமான வரி செலுத்துபவராக இருக்கக்கூடாது. 

குடும்ப வருமானம் வருடத்திற்கு ரூ.2.5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் சேருவதற்கு சாதி, மத, இன பேதங்கள் இல்லை. பொதுப்பிரிவினர், பின் தங்கிய வகுப்பினர், பட்டியலின பிரிவினர் உட்பட அனைவரும் இதில் இணைய தடையில்லை. திருமணமானவர்கள், கணவரை பிரிந்தவர்கள், விவாகரத்தானவர்கள் மற்றும் விதவைகளுக்கும் இத்திட்டம் பொருந்தும்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்