சூர்யாவுடன் இணையும் அமீர்...!
6 மார்கழி 2023 புதன் 07:20 | பார்வைகள் : 7430
பருத்திவீரன் பட விவகாரம் ஓய்ந்த நிலையில், தனக்கும், சூர்யாவுக்கும் இடையே பிரச்சினை என வெளிவந்துள்ள தகவலை இயக்குநர் அமீர் மறுத்துள்ளதோடு வாடிவாசல் படத்தில் அவருடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பருத்திவீரன் படத்தை வைத்து இயக்குநர் அமீருக்கும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது ஒருபுறமிருக்க, அடுத்த சர்ச்சையை கிளப்பும் வகையில் 'மௌனம் பேசியதே' படத்தில் இருந்தே சூர்யாவுக்கும் இயக்குநர் அமீருக்கு இடையே பிரச்சினை இருப்பதாக தகவல் உலா வரத் தொடங்கியது.
இந்நிலையில், இயக்குநர் அமீர் அளித்த பேட்டியில் , ''எனக்கும் சூர்யாவுக்கும் இடையே பிரச்சினை எதுவும் இல்லை. நான் அவருடன் சேர்ந்து வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளேன். வாடிவாசல் படத்தில் நடிக்க வெற்றிமாறன் ஓராண்டுக்கு முன்பே என்னிடம் பேசினார்.
ஒரு முறை எனக்கு போன் செய்து வாடிவாசல் படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. நீங்கள் நடிக்கிறீர்களா? சூர்யாவுடன் சேர்ந்து நடிக்க வேண்டும். எதுவும் பிரச்சினையா? என கேட்டார். அதற்கு நான், எனக்கும் சூர்யாவுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. எனக்கு அவர் நல்ல நண்பர். நல்ல சகோதரர் என கூறினேன். அதன் பிறகு வெற்றிமாறன் என்னிடம் நேரில் கதை சொன்னார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறேன்.
எனக்கும் சூர்யாவுக்கும் இடையே நல்ல நட்பு உண்டு. குறிப்பாக நந்தா பட சமயத்தில் இருந்தே எனக்கும் அவருக்கும் பழக்கம் உண்டு. அடிக்கடி நாங்கள் இருவரும் இணைந்து அவருடைய காரிலேயே கொடைக்கானல் போவோம். இதுபோன்று எங்களுக்குள் மறக்க முடியாத பல நினைவுகள் இருக்கிறது'' என தெரிவித்துள்ளார்.
இதேபோல், நடிகர் சூர்யா, 'கார்த்தி 25' படத்தின் விழாவில் கலந்துகொண்டபோது ''என்னுடைய தம்பிக்கு பருத்திவீரன் எனும் யாராலும் மறக்க முடியாத படத்தை கொடுத்த அமீர் அண்ணாவுக்கு நன்றி'' என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

























Bons Plans
Annuaire
Scan