ஹமாஸின் சுரங்கப்பாதைகளை அழிக்க இஸ்ரேல் முடிவு
6 மார்கழி 2023 புதன் 10:15 | பார்வைகள் : 2917
ஹமாஸ் படையினரின் ரகசிய சுரங்கப்பாதைகளுக்குள் கடல் நீரை நிரப்ப இஸ்ரேல் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கத்தாரின் முன் முயற்சியில் கொண்டு வரப்பட்ட இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.
இதற்கு ஹமாஸ் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது தான் முக்கிய காரணம் என இஸ்ரேல் குற்றம் சாட்டியது.
அத்துடன் மேலும் சில நாட்கள் போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தையில் இருந்தும் இஸ்ரேல் வெளியேறியது.
இதனால் காசா பகுதியில் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலிய படையினருக்கும் இடையிலான சண்டை மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் காசா பகுதியில் ஹமாஸ் படையினர் பெரிய பலமாக இருக்கும் ரகசிய சுரங்கப்பாதைகளை கடல் நீரை நிரப்பும் புதிய திட்டத்தை இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
இதற்காக வடக்கு என்கிளேவில் 5 பம்ப் அமைப்புகளை இஸ்ரேல் அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
மத்திய தரைக்கடலின் நீரை கொண்டு கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டர் நீளமுள்ள ஹமாஸின் ரகசிய சுரங்கப்பாதையை நிரப்ப சில வாரங்கள் தேவைப்படும், அதற்குள் பிணையக் கைதிகள் அனைவரையும் விடுவிக்க போதுமான நேரம் கிடைக்கும் என இஸ்ரேல் திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆனால் இந்த திட்டத்தை இஸ்ரேல் நிறைவேற்றினால், காசா பகுதியில் உள்ள நல்ல தண்ணீர் பாதிக்கப்படும் மேலும் பல வகையில் அபாயங்களை ஏற்படுத்தும்.
அத்துடன் அமெரிக்க நட்பு நாடுகள் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் கண்டனங்களை இஸ்ரேல் எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.