யாழில் போதை மருந்து பாவனையால் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆபத்து
7 மார்கழி 2023 வியாழன் 03:00 | பார்வைகள் : 3522
யாழ். மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனையால் நுரையீரல் மற்றும் இருதய வால்வு ஆகியவற்றில் கிருமி தொற்றுக்குள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு சிகிச்சைக்கு வருபவர்களில் பெருமளவானோர் 25 வயதுக்கு குறைந்தவர்கள் என்றும் தெரிய வருகின்றது.
அதன்படி,வெளிநாடுகளுக்கு செல்வதற்காக இளைஞர்கள் பலர் வைத்திய சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு வைத்திய பரிசோதனைக்காக வருகின்றனர்.
இவ்வாறானவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது நுரையீரல் மற்றும் இருதய வால்வு ஆகியவற்றில் கிருமித் தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த இளைஞர்களிடம் பெற்றுக்கொண்ட தகவலின் அடிப்படையில் அவர்கள் போதைப்பொருளை நுகர்வது கண்டறியப்பட்டது.
இதேவேளை, சுவாசிக்க முடியாமல் , சிரமத்துடனும் கடும் காய்ச்சலுடனும் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வரும் இளையோருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவர்களுக்கும் இருதய வால்வில் தோற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஒரு வருட காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஊசி மூலமான போதைப்பொருள் நுகர்வால் 15க்கும் மேற்பட்ட மரணங்கள் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.