Paristamil Navigation Paristamil advert login

எளிமையிலிருந்து வெற்றியை எட்டியவர்கள்

எளிமையிலிருந்து வெற்றியை எட்டியவர்கள்

7 மார்கழி 2023 வியாழன் 03:55 | பார்வைகள் : 1929


சிங்கப்பூரில் தொழிற்சங்கம் தொடர்ந்து பெரும் பங்கு வகிக்கவேண்டும். தொழிற்சங்கங்களுக்கும் அரசாங்களுக்கும் இடையே இருதரப்பு நன்மைகள் இருக்கவேண்டும். 

நவம்பர் 22ஆம் தேதி நடைபெற்ற தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) தேசிய பேராளர்கள் மாநாட்டில் பிரதமர் லீ சியன் லூங் தம் உரையில் இவ்வாறு குறிப்பிட்டார். 

ஊழியரணி, வேலையிட நிர்வாகம், அரசாங்கம் ஆகிய தரப்புக்கு இடையிலான ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் சிங்கப்பூரின் முத்தரப்புக் கொள்கை சிங்கப்பூரில் வேலை செய்யும் என்றார் பிரதமர் லீ.

சிங்கப்பூரின் பொருளியலுக்கும் சமூக ஒற்றுமைக்கும் அடித்தளமாக உள்ள இந்தக் கொள்கை முன்னெடுக்கும் புதிய என்டியுசி மத்திய குழுவின் தலைவர் திரு தனலெட்சுமியையும் உறுப்பினர்கள் திரு அரசு துரைசாமி, திரு மைக் மாரியப்பா திருமண் ஆகியோரையும் தமிழ் முரசு நேரில் கண்டது.

இவர்கள் மூவருமே எளிய சூழலில் வளர்ந்து தற்போது பிறருக்கு உதவிக்கரம் நீட்டுவதில் மும்முரமாகச் செயல்படுகின்றனர்.

வெற்றிக்கு உதவிய மனஉறுதி

அன்றாட உணவுக்கே உத்தரவாதம் இல்லாத சூழலில் வளர்ந்து, மனஉறுதியுடன் போராடி, பின்னர் வெற்றிக்கனியை எட்டிப் பறித்திருக்கிறார் தொழிற்சங்கவாதியான கே. தனலெட்சுமி.

சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியரணித் தலைவரான திருவாட்டி தனலெட்சுமி, தேசிய தொழிற்சங்க காங்கிரசின் புதிய தலைவராக நவம்பர் 23ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூத்த சுகாதாரத்துறை தொழிற்சங்கவாதியான திருவாட்டி தனலெட்சுமி, 57, திருவாட்டி மேரி லியூவிடமிருந்து அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

2015ல் முதன்முதலாக என்டியுசி செயற்குழுவில் இடம்பெற்ற திருவாட்டி தனலெட்சுமி, 2019ல் அதன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2016 முதல் 2018 வரை நியமன நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் செயலாற்றியுள்ளார்.

தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் மருந்து விநியோகத்துறையில் கிட்டத்தட்ட 35 ஆண்டு காலம் நிர்வாகியாகப் பணியாற்றியிருக்கிறார் திருவாட்டி தனலெட்சுமி.

“ஒரே வேலையில்தான் இதுநாள்வரை உள்ளேன். என் முதல் வேலையான இது அநேகமாக என் கடைசி வேலையாகக்கூட இருக்கக்கூடும்,” என்று சிரித்தவாறு கூறுகிறார்.

சவால்மிக்க குடும்பச் சூழல்
1966ல் பிறந்த திருவாட்டி தனலெட்சுமி, பெற்றோருடனும் உடன்பிறந்தோர் இருவருடனும் தோ பாயோவிலல் சிறு வாடகை வீட்டில் வளர்ந்தார். வீட்டில் போதிய அறைகள் இல்லாத நிலையில் தம் தந்தை ஒட்டுப்பலகையால் ஆன தடுப்புகளை அமைத்திருந்ததாக அவர் நினைவுகூர்ந்தார்.

போதிய வருமானம் இல்லாததால் அவ்வப்போது உணவு, மின்சாரத் தட்டுப்பாடுகளை அனுபவித்து வளர்ந்தது இவரது குடும்பம். வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க திருவாட்டி தனலெட்சுமியின் தந்தை இரண்டு வேலைகளைச் செய்துவந்தார். ஜோகூரிலுள்ள மெர்சிங்கில் பிறந்து பின் சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்த அவரது தாயார், பள்ளி ஒன்றில் சிறிய உணவுக்கடையை நடத்தினார். வீட்டில் அவரைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால் காலை ஐந்து, ஆறு மணியளவில் தாயார் அவரை கடைக்கு அழைத்துச் செல்வார். “கடையில் தாயாருக்கு உதவி செய்துகொண்டே நானும் என் உடன்பிறந்தோரும் படித்தோம். அது சிரமமாக இருந்தது,” என்றார் திருவாட்டி தனலெட்சுமி.

அவருக்கு பேச்சுத்தமிழ் மட்டும் தெரியும். சந்தர்ப்பச் சூழல் காரணமாக, பள்ளியில் அவர் தமிழ் படிக்கவில்லை. “என்னைக் கவனிக்க நினைத்த என் தாயார், தாம் வேலை பார்த்த அதே பள்ளியில் என்னை மாணவியாகச் சேர்த்தார். நான் அங்கு மலாய் படித்தேன்,” என்றார் அவர். திருமணம் செய்துகொள்ளாமல் இருந்த திருவாட்டி தனலெட்சுமி, தற்போது தமது தாயாருடன் வசிக்கிறார். பிறருக்குத் தயக்கமின்றி உதவும் பெற்றோரிடம் பண்புகளைக் கற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.

வேலைக்காக நெடுநாள்
காத்திருப்பு
பலதுறைத் தொழிற்கல்லூரியில் பட்டயம் பெற்றபோது 1985ஆம் ஆண்டு நிலவிய பொருளியல் நெருக்கடியால் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் பணிநீக்கம் செய்யப்பட்ட காலக்கட்டமாக இருந்ததை அவர் நினைவுகூர்ந்தார். ஈராண்டுகளுக்கு வேலை இல்லாத நிலையில் திருவாட்டி தனலெட்சுமி, துணைப்பாட வகுப்புகளை எடுத்து வருமானம் ஈட்டினார்.

தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் மருந்தக உதவியாளராக பணியில் சேர்ந்தபோது நிம்மதி பெருமூச்சுவிட்டதாகக் கூறினார் திருவாட்டி தனலெட்சுமி.

“என் சம்பளம் அப்போது ஏறத்தாழ 600 வெள்ளி. இருந்தபோதும் ஏதேனும் ஒரு வேலை கிடைத்தால் போதும் என இருந்த நான் அதனை ஏற்றுக்கொண்டேன். கிடைத்த வேலையைப் பெரிதும் மதித்தேன்,” என்று அவர் கூறினார்.

போராட்டத்துடன் நிறைவேறிய மேல்படிப்பு
தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எண்ணி, பகுதிநேர உயர்நிலைப் பட்டயப்படிப்பையும் பட்டப்படிப்பையும் மேற்கொண்டார். தரநிலை உறுதி மேலாண்மை, சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் பட்டயங்களையும் (Quality assurance management) வர்த்தக நிர்வாகத்தில் பட்டப்படிப்பையும் கற்றுத் தேறினார் அவர்.

பின்னர் திருவாட்டி தனலெட்சுமி, அப்போதைய சிங்கப்பூர் ஊழியர்க் கல்விக்கழகத்தில் தொழில்துறை உறவுகள் துறையில் பட்டயம் எடுத்தார். “கழகம் கொடுத்த 10,000 வெள்ளி கல்விமான் தொகையை முதுகலைக் கல்விக்காகப் பயன்படுத்தினேன்,” என்று அவர் கூறினார்.

மிகவும் போராடித்தான் இந்தக் கல்வித் தகுதிகளைப் பெற்றதாக திருவாட்டி தனலெட்சுமி கூறினார். “வேலையிடத்தில் அப்போது ஊழியர் பற்றாக்குறை. வேலையை முடித்துக்கொள்ளாமல் வகுப்புக்குச் செல்ல என்னால் இயலவில்லை. பலமுறை நான் வகுப்புகளுக்குத் தாமதமாகச் சென்றிருந்தேன், சில நேரங்களில் செல்ல முடியவில்லை,” என்றார்.

தொழிற்சங்க அறிமுகம்
தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை தொழிற்சங்கத்தின் தலைவராக இருந்த தம் மேற்பார்வையாளரின் ஊக்குவிப்பில் திருவாட்டி தனலெட்சுமி தொழிற்சங்கத்தில் சேர்ந்தார். “சங்கத்தில் சேர்த்தது மட்டுமல்லாது தொழிற்சங்கம் வழங்கிய வகுப்புகளில் சேரவும் என் மேற்பார்வையாளர் ஊக்குவித்தார்,” என்று அவர் கூறினார்.

மருத்துவமனையிலுள்ள மற்ற சீருடைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் இலவச காலணிகள் மருந்தகச் சீருடைப் பணியாளர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் திருவாட்டி தனலெட்சுமியின் தொழிற்சங்கப் பொறுப்பு தொடங்கியது. “இந்த கோரிக்கை என்னுடைய யோசனையாக இருந்தது. இதற்காக நான் மருத்துவமனைத் தொழிற்சங்கத்திடம் சமர்ப்பித்த மனு இறுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது,” என்று அவர் கூறினார்.

இந்த வெற்றியை அடுத்து தொழிற்சங்கத்தின் தலைமைத்துவம் தம்மைக் கூடுதலாக கவனித்து மேலும் பல பொறுப்புகளை வழங்கியதாக திருவாட்டி தனலெட்சுமி கூறினார். “ 23 வயதிலேயே நான் தொழிற்சங்கத்தின் செயற்குழுவில் இடம்பெற்று ஈராண்டுகளுக்குப் பிறகு பொருளாலரானேன்,” என்றார். தொழிலாளர்களின் நலனுக்கான ஒட்டுமொத்த பேரப்பேச்சுகளில் ஈடுபடவும் ஆரம்பித்தார்.

வேலையிட-தொழிற்சங்க
உறவில் முதிர்ச்சி
சிங்கப்பூரில் 1950களிலும் 1960களிலும் முத்தரப்புக் கொள்கை உருவானதற்கு முன்னதாக வேலையிட நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையே மோதல்போக்கு நிலவியது. தாம் தொழிற்சங்கம் சேர்ந்த காலக்கட்டத்தில் இந்த மோதல்போக்கு ஓய்ந்து சகிப்புத்தன்மையாக இருந்ததாகக் கூறினார்.

சகிப்புதன்மை நிலவியிருந்தபோதும் இருதரப்பு நம்பிக்கை குறைவாக இருந்ததாகக் கூறினார். பிரச்சினைகளைத் தொழிற்சங்கங்கள் மனிதவள அமைச்சிடம் எடுத்துச் செல்லும்போது பல நேரங்களில் இழுபறி நேர்ந்துள்ளது. வெற்றி யார் பக்கம் என்ற போட்டித்தன்மை அப்போது நிலவியது. இப்போது இந்த சகிப்புத்தன்மை பங்காளித்துவமாகவும் கூட்டுமுயற்சியாகவும் உருமாறிவிட்டதைக் கண்டு மகிழ்வதாகத் திருவாட்டி தனலெட்சுமி கூறினார்.

வேலையிட நிர்வாகிகள் மாறும்போது உறவுகளும் புதுப்பிக்கப்பட வேண்டியுள்ளதாக திருவாட்டி தனலெட்சுமி கூறினார். “ஐரோப்பிய நிர்வாகி ஒருவர், சுகாதார நிறுவனம் ஒன்றின் தொழிற்சங்க அலுவலகத்தைச் சுரங்கத் தளத்திற்கு மாற்றிய முடிவு, சிங்கப்பூரின் முத்தரப்புப் பங்காளித்துவத்தைப் பற்றிய அறியாமையைக் காட்டியது. உரிய ஆலோசனை பெற்ற பிறகு அவர் தம் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டியதாயிற்று,” என்றார் அவர்.

“நிர்வாகத்திற்கும் ஊழியரணிக்கும் இடையிலான உறவுகள் மதிக்கப்படுவதை நாம் உறுதி செய்யவேண்டும். இதன் மூலம் தொழில்துறைக்கு நிம்மதியையும் ஊழியர்களுக்கு சமூக நீதியையும் பெற முடியும். இதை முறையாகச் செய்தால் முத்தரப்புப் பங்காளித்துவம் முழுமையாக நடைமுறையில் இயங்கும்,” என்று அவர் கூறினார்.

இப்போதும்கூட முத்தரப்புப் பங்காளித்துவம் தலைவர்களையும் அவர்களது தனிப்பட்ட அணுகுமுறையையும் சார்ந்துள்ளதாகத் திருவாட்டி தனலெட்சுமி கூறினார். நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதுபோல முத்தரப்புப் பங்காளித்துவம் மேலும் தெளிவாகவும் விரிவாகவும் நிறுவப்படலாம் என்றார் திருவாட்டி தனலெட்சுமி.

அனைவரையும் ஒருங்கிணைக்கும் கலந்தாலோசிக்கும் முறையை என்டியுசி பின்பற்றுவதாகக் கூறும் திருவாட்டி தனலெட்சுமி, 42,000 ஊழியர்களின் கருத்துகளை அந்த அமைப்பு கருத்தில் கொண்டுள்ளதாகக் கூறினார்.

கொவிட்-19 காலக்கட்டத்தில் பல்வேறு சவாலான காலக்கட்டங்களில் அனைவரும் ஒத்துழைத்தற்கு முத்தரப்புப் பங்காளித்துவம் காரணம் என்றார். “உண்மையிலேயே முத்தரப்புப் பங்காளித்துவம் என்பது நம் தேசிய பொக்கிஷம்,” என்று அவர் கூறினார்.

புதிதாக ஏற்றுள்ள தம் பொறுப்பு மூலம் வயதானோருக்கும் பெண்களுக்கும் இளையர்களுக்கும் கூடுதலான உதவிகளை ஏற்பாடு செய்ய இவர் விரும்புகிறார். முத்தரப்புப் பங்காளித்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வு இளையர்களிடையே அதிகம் இருக்கவேண்டும் என்பது அவரது விருப்பமாகும். “சரியான புரிதல் இல்லாதபட்சத்தில் முன்பு நிலவிய தொழில்துறை உறவுகளில் நம்பிக்கையற்ற நிலைமைக்கு நாம் திரும்பக்கூடும்,” என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரிலுள்ள தொழிற்சங்கங்களை அரசு துரைசாமி, 55, முன்னதாக நம்புவதில்லை என்றார். ஆனால் இன்றோ இவர் ‘பிஎஸ்ஏ’ துறைமுக செயலாக்க நிறுவனத்தில் சேவைப் பொறியாளரும் தொழிற்சங்கத் தலைவருமாகச் செயல்படுகிறார்.

“வெளிநாடுகளில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை இங்குள்ள தொழிற்சங்கங்கள் செய்வதில்லை என்பதால் அவற்றுக்குச் சக்தி குறைவு என நான் இளையராக இருந்தபோதுட தவறாக எண்ணியிருந்தேன்,” என்று அவர் கூறினார்.

என்டியுசியின் புதிய செயற்குழுவில் மறுபடியும் நிதிச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளார். இதனுடன் நான்காவது முறையாக இச்செயற்குழுவில் இடம்பெறுகிறார் திரு அரசு.

சிங்கப்பூரில் பிறந்த இவரது பெற்றோர்கள் தமிழகத்தின் தஞ்சாவூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். புக்கிட் பாஞ்சாங் தொடக்கப்பள்ளியிலும் டன்யர்ன் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்ற திரு அரசு, தொழிற்கல்வி வகுப்புகளை எடுத்தார். ஓ நிலை முடித்து தேசிய சேவையை நிறைவேற்றிய பின்னர் வெவ்வேறு வேலைகளில் ஈடுபட்டார். இறுதியில் தம் வளர்ப்புச் சகோதரியின் ஆலோசனையைப் பின்பற்றி 1993ல் ‘பிஎஸ்ஏ’இல் சேர்ந்தார்.

துறைமுகக் கருவிகளை, குறிப்பாக கனமான பாரந்தூக்கிகளைப் பராமரித்தல் இவரது பணி. பிரானி துறைமுகத்திலிருந்து பாசிர் பாஞ்சாங் துறைமுகத்திற்கு மாற்றப்பட்டு இன்றுவரை அவர் பணியாற்றுகிறார்.

தமது மேற்பார்வையாளரின் ஊக்குவிப்பால் துறைமுக ஊழியர்த் தொழிற்சங்கத்தில் கூடுதலாக ஈடுபட்டு தொழிற்சங்கத்தின துணை ஏற்பாட்டுக்குழுவில் சேர்ந்தார். பணிகளை ஆர்வத்துடனும் முனைப்புடனும் மேற்கொண்ட திரு அரசுக்கு கூடுதல் பொறுப்புகள் தரப்பட்டன. படிப்படியாக உயர்ந்து அவர் அந்தத் தொழிற்சங்கத்தின் தலைமை செயலாளர் ஆனார்.

2003ல் ‘பிஎஸ்ஏ’ நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தொழிற்சங்கத்தினர் ஊழியரணிக்கு ஆதரவு தந்ததைக் கவனித்தபோது அச்சங்கம் மீதான இவரது மரியாதை அதிகரித்தது. “ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களையும் ஆட்குறைப்புப் பற்றிய அச்சத்தில் தவித்த ஊழியர்களையும் தொழிற்சங்கம் மிக நல்ல முறையில் பராமரித்தது, என்று அவர் கூறினார்.

ஒரே குடும்பத்தில் பலர் ‘பிஎஸ்ஏ’ வேலை செய்யப்படுவதால் ஆட்குறைப்பு நடவடிக்கைகயின்போது ஒரு குடும்பத்தில் குறைந்தது ஒருவரின் வேலையாவது காப்பாற்றப்படவேண்டும் என்பதை தொழிற்சங்கங்கள் உறுதி செய்தன. அத்துடன் ஆட்குறைப்பு செய்யப்பட்டவர்களுக்குப் புதிய வேலைகளைத் தேடித் தருவதில் தொழிற்சங்கம் பங்காற்றியது என்று திரு அரசு குறிப்பிட்டார்.

பலரது வீடுகளிலிருந்து வெகு தொலைவிலுள்ள புதிய துவாஸ் சவுத் பெரும் துறைமுறைகத்தில் வேலை செய்வதில் பலர் தயங்கியபோது அவர்களுக்குரிய போக்குவரத்து முறை ஏற்படுத்த ‘பிஎஸ்ஏ’ நிர்வாகத்தினருடனும் கடல்துறை, துறைமுக ஆணையத்துடனும் நிலப்போக்குவரத்து ஆணையத்துடனும் திரு அரசு பேரப்பேச்சில் ஈடுபட்டார். அத்துடன் தானியக்க முறைகள் உள்ள புதிய துறைமுகத்திற்குத் தேவைப்படும் திறன்களைக் கற்க தொழிலாளர்களையும் அவர் ஊக்குவிப்பதற்கான சம்பள முறையையும் அமைப்பதற்கு உதவினார்.

2018ல் இவர் நியமன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். திறன் மேம்பாடு குறித்து ஊழியர்களில் சிலர் உணரும் அதிருப்தியை திரு அரசினால் புரிந்துகொள்ள முடிகிறது. வேலை செய்துகொண்டே புதிய திறன்களைக் கற்பது பலருக்குச் சவாலாக இருக்கக்கூடும். “கற்றுக்கொள்வது குறித்து தயக்கம் காட்டுபவர்களுக்குத் தைரிய வார்த்தைகளைப் பேசுவோம்,” என்று அவர் கூறினார். நிறுவனப் பயிற்சி குழுக்களை வளர்ப்பது தம் முக்கிய வருங்கால இலக்குகளில் ஒன்றாக இருக்கப் போவதாக திரு அரசு கூறினார்.

ஆசிரியர்களுக்கான அதிக நீக்குப்போக்கு வேலை முறைகளைக் கல்வி அமைச்சு அறிமுகம் செய்திருக்கிறது. அத்துடன், முன்புவிட இப்போது அதிகமான ஆசிரியர்கள் பகுதிநேரமாகப் பணியாற்றுகின்றனர்.

சிங்கப்பூர் ஆசிரியர் தொழிற்சங்கம் வலுவாக முன்வைத்த இந்த யோசனைகளைக் கல்வி அமைச்சு திட்டங்களாகச் செயல்படுத்தி வருகிறது. இருந்தபோதும் ஆசிரியர்களைப் பராமரிப்பதில், குறிப்பாக அவர்களது தனிப்பட்ட நேரத்தைப் பாதுகாப்பதில் கூடுதல் முயற்சி தேவைப்படுவதாக சிங்கப்பூர் ஆசிரியர் தொழிற்சங்கத்தின் தலைமைச் செயாலாளர் மைக் மாரியப்பா திருமண், 54, தெரிவித்தார்.

தொழிலாளர்களாக இருந்த பெற்றோர்களால் மூன்று சகோதரர்களுடன் வளர்க்கப்பட்ட திரு மைக்கின் கைவசம் இரண்டு முதுகலைப் பட்டச் சான்றிதழ்கள் உள்ளன.

டவுன்ஸ்வில் தொடக்கப்பள்ளியில் முதன்முதலாக ஆசிரியாகப் பணியாற்றின திரு மைக் 1995ல் சிங்கப்பூர் ஆசிரியர் தொழிற்சங்கத்தில் சேர்ந்தார். ஆசிரியர் தொழிற்சங்கம் தனது இளையர் பிரிவைத் தொடங்கிய நினைத்தபோது அதற்கு திரு மைக் இணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பணியாளர்கள் நல்ல சம்பளத்தையும் வேலை வாய்ப்புகளையும் அனுபவிப்பதற்குத் தேவைப்படும் பாதுகாப்பை தொழிற்சங்கங்கள் உறுதி செய்வதாக திரு மைக் கூறினார். “சிங்கப்பூரின் பொருளியல் போட்டித்தன்மைக்குத் தேவைப்படும் தொழில்துறை உறவுகளைத் தொழிற்சங்கங்கள் உறுதி செய்கின்றன,” என்று அவர் கூறினார்.

“இளையர்களை அதிக அளவில் தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபடுத்தி அவர்களை உறுப்பினராக்கும் குறிக்கோளுடன் செயல்படவிருக்கிறார். வருங்கால ஊழியரணியைச் செதுக்குவதில் இளையருக்கு உள்ள பங்கை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அவர்களது விருப்பங்களும் அக்கறைகளும் தொழிற்சங்கத்தில் கருத்தில் கொள்ளப்படும்,” என்றார் திரு மைக்.

தொழிற்சங்கவாதிகளைத் தங்களது அதிகாரபூர்வ பிரதிநிதிகளாக பணியாளர்கள் ஒப்புக்கொண்டு அவர்கள் அணுக்கமாக ஒத்துழைக்கவேண்டும் என்று திரு மைக் கூறுகிறார். “இத்தகைய ஒத்துழைப்பால் ஊழியர்களின் நலனுக்காகக் கொடுக்கும் தொழிற்சங்கங்களின் குரல் மேலும் ஓங்கும்,” என்று அவர் கூறினார்.

நன்றி தமிழ் முரசு

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்