தமிழகம் மீள்வதற்கான அனைத்து உதவிகளும் செய்யப்படும்: ராஜ்நாத் சிங் பேட்டி
7 மார்கழி 2023 வியாழன் 18:33 | பார்வைகள் : 2182
புயல், மழை பாதிப்பில் இருந்து தமிழகம் மீள்வதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
சென்னையில் புயல், வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்த பின் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது மத்திய அமைச்சர் முருகன், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இயல்பு நிலை
பின்னர், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முதல்வர் ஸ்டாலின் கூட்டாக பேட்டி அளித்தனர். </p><br><p>அப்போது ஸ்டாலின் கூறியதாவது: அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்பு, சேதம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. பெரியளவில் பொருட் சேதம் ஏற்படவில்லை. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். தமிழகத்திற்கு ரூ.450 கோடியை முதற்கட்டமாக வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி.
அனைத்துப் பகுதிகளையும் இயல்புநிலைக்கு கொண்டு வர தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை மழை,வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்தியக்குழு விரைவில் வர உள்ளது. தமிழகத்தின் கோரிக்கைகள், தேவைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் மனுவாக அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து உதவிகளும் செய்யப்படும்
ராஜ்நாத் சிங் கூறியதாவது: மிக்ஜாம் புயல் குறித்து நேரில் ஆய்வு செய்தேன். தமிழகத்திற்கு தேவையான உதவிகளை வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை அறிந்து பிரதமர் மோடி மிகவும் கவலையடைந்தார். தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் சார்பில் கூறுகிறேன். மீட்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.450 கோடியும், நகர்ப்புற வெள்ளத் தடுப்பு திட்டத்தின் கீழ் ரூ.561 கோடியும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. புயல், மழை பாதிப்பில் இருந்து தமிழகம் மீள்வதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளும் விரைந்து செய்யப்படும். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய விரைவில் மத்தியக்குழு வரும். இவ்வாறு அவர் கூறினார்.