Epône : 21 மாத குழந்தை சடலமாக மீட்பு! - இளம் பெற்றோர் கைது!!

8 மார்கழி 2023 வெள்ளி 08:00 | பார்வைகள் : 9082
பரிசின் புறநகரான Epône (Yvelines) இல் உள்ள தங்குமிடம் (hôtel ) இருந்து 21 மாத குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குழந்தையின் உடலின் காயங்கள் இருந்ததை அடுத்து இளம் பெற்றோர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை 31 வயதுடைய ஆணையும், அவரது 28 வயதுடைய மனைவியையும் Yvelines மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். முதல்கட்ட விசாரணைகளில் தெரியவருவதாவது, வியாழக்கிழமை காலை அங்குள்ள தங்குமிடம் ஒன்றில் இருந்து மருத்துவக்குழுவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அவர்கள் குறித்த தங்குமிடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு அறை ஒன்றில் குழந்தை ஒன்று இறந்த நிலையில் இருந்ததாகவும்., முதலுதவி சிகிச்சைகள் அளித்தபோதும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை, குழந்தையின் உடலின் உராய்வு காயங்கள் இருந்ததை அடுத்து அவர்கள் காவல்துறையினரை அழைத்துள்ளனர்.
குழந்தையின் பெற்றோர்கள் விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது ஏனைய இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டு காவல்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.