Paristamil Navigation Paristamil advert login

 ஹிஸ்புல்லாவிற்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு  விடுத்துள்ள எச்சரிக்கை

 ஹிஸ்புல்லாவிற்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு  விடுத்துள்ள எச்சரிக்கை

8 மார்கழி 2023 வெள்ளி 08:12 | பார்வைகள் : 2481


இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன் 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். 

இதனால் இஸ்ரேல், ஹமாஸ் மீது போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது.

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியபோது, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஹமாஸ்க்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

இதனால் ஹமாஸ்- இஸ்ரேல் இடையிலான போர் பிராந்திய போராக மாறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது. எனினும் எகிப்து, ஈரான் மற்றும் அரபு நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை. இருந்த போதிலும் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஹிஸ்புல்லாவிற்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில் ,

"ஹிஸ்புல்லா முழு அளவில் போரை தொடங்க முடிவு செய்தால், அதன் சொந்த கைகளால் பெய்ரூட்டை காசாவாகவும், தெற்கு லெபனானை கான் யூனிஸ் நகராகவும் மாற்றும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஹமாஸ்- இஸ்ரேல் மோதலை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. நேற்று அதிபர் ஜோ பைடன் நேதன்யாகு மற்றும் ஜோர்டான் அதிபர் அப்துல்லா ஆகியோரிடம் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

நேதன்யாகுவிடம் ஜோ பைடன் பேசும்போது, காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகள் மற்றும் மேற்கு கரையில் பாலஸ்தீனர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது குறித்து பேசியதாக தெரிவிக்கபடுகின்ற நிலையில் , நேதன்யாகு ஹிஸ்புல்லாவிற்கு எச்சரிக்கை விடுத்தது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.


காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்