தெலங்கானா: நாளை முதல் பெண்களுக்கு இலவச பஸ் சேவை துவக்கம்
8 மார்கழி 2023 வெள்ளி 17:21 | பார்வைகள் : 2300
தெலங்கானா மாநிலத்தில் நாளை முதல் பெண்களுக்கு இலவச பஸ் சேவை துவக்கப்பட உள்ளது.
தெலங்கானாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தேர்தலின் போது பெண்களுக்கு இலவச பஸ் சேவை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. இதனிடையே வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நாளை ( டிச.,9-ம் தேதி ) முதல் இலவச பஸ் சேவை துவக்கப்பட உள்ளது.
இது குறித்து மாநில சாலைப்போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குனர் வி.சி.சஜ்ஜனார் கூறுகையில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு மாநில சட்டபை வளாகத்தில் இருந்து முறையாக துவங்கப்படும் என்றார். இத்திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் திருநங்கைகள் மாநிலங்களுக்கு இடையே செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் மாநிலத்திற்குள் செல்லும் பஸ்களிலும் இலவசமாக பயணம் செய்யலாம் என்றார். மேலும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.,க்கள் அதிகாரிகள் கலந்து கொள்வர் என்றார்.
மேலும் இன்சூரன்ஸ் திட்டம் உள்ளடக்கிய ராஜிவ் ஆரோக்யஸ்ரீ திட்டத்தையும்நாளை துவக்க உள்ளது.
முன்னதாக முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தற்காலிக சபாநாயகராக அக்பருதீன் ஓவைசி தேர்வு செய்யப்பட்டார். இவர் ஏ.ஐ.எம்.ஐ.எம்.கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசின் தம்பியாவார்.