Val-d’Oise : யூத பெண் மீது தாக்குதல் மேற்கொண்ட இரு சிறுவர்கள் கைது!
10 மார்கழி 2023 ஞாயிறு 08:23 | பார்வைகள் : 4208
‘யூத பெண்’ எனும் ஒரு காரணத்துக்காக இளம் பெண் ஒருவர் தாக்கப்பட்டும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான அப்பெண், நான்கு மாத கர்ப்பிணி ஆவார்.
இச்சம்பவம் பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள அப்பெண்ணின் வீட்டில் கடந்த நவம்பர் 23 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. தாக்குதலாளிகள் இவ்வாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 26 வயதுடைய நான்கு மாத கர்ப்பிணி பெண் ஒருவரை அவர்கள் தாக்கி, கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளனர்.
காலை 11 மணி அளவில் அப்பெண்ணின் வீட்டின் கதவை அவர்கள் தட்டியுள்ளனர். கதவு திறக்கப்பட, எதிரே முகக்கவசம் அணிந்த இருவர் நின்றுள்ளனர். பின்னர் அவர்களில் ஒருவர் அப்பெண்ணின் கழுத்தை நெரிக்க, இரண்டாமவர் துப்பாக்கி ஒன்றை எடுத்து அவரை நோக்கி பிடித்துக்கொண்டு மிரட்டியுள்ளார். பின்னர் அப்பெண்ணின் முகத்திலும் தாக்கியுள்ளார். “அவர் ஒரு யூதர். அவர் பணக்காரராக இருப்பார்” என அவர்கள் கத்திக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் அவரிடம் இருந்த 6,000 யூரோக்கள் பெறுமதியான நகைகளையும், 400 யூரோக்கள் பணத்தினையும் கொள்ளையிட்டுக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பரிசிய காவல்துறையினர் Val-d'Oise மாவட்டத்தில் வைத்து குறித்த இரு நபர்களையும் கைது செய்தனர். அவர்கள் 16 மற்றும் 17 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.