தமிழக அமைச்சர்களுக்கு எதிரான பொதுநல மனு
9 தை 2024 செவ்வாய் 01:58 | பார்வைகள் : 2077
சிவகங்கையை சேர்ந்த கருப்பையா காந்தி சார்பில் வக்கீல் சமீர் மலிக் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 'தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.க்கள் கதிர் ஆனந்த், தயாநிதி மாறன், முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, வளர்மதி ஆகியோருக்கு எதிராக தமிழ்நாட்டில் பல்வேறு கோர்ட்டுகளில் நடைபெறும் வழக்குகளை சிறப்பு கோர்ட்டு அமைத்து விசாரிக்க வேண்டும் அல்லது வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்.
மேலும் தமிழக அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்குகளை விரைந்து விசாரிக்க சென்னை ஐகோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், தீபாங்கர் தத்தா அடங்கிய அமர்வு கடந்த அக்டோபர் 20-ந் தேதி விசாரித்தது. இருதரப்பு வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், 'இந்த பொதுநல மனு விசாரணைக்கு உகந்ததா? என்பது குறித்த ஆட்சேபனைகளை பதில் மனுவாக 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும், சி.பி.ஐ. இயக்குனருக்கும், தமிழ்நாடு டி.ஜி.பி.க்கும் உத்தரவிட்டனர்.
மேலும் பதில் மனுக்களுக்கு மனுதாரர் விளக்க மனுவை ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை டிசம்பர் 4-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதன்படி டிசம்பர் 4-ந் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 4 வாரங்களுக்கு மனுவை தள்ளிவைக்குமாறு தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே பொது நல மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது. அப்போது இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவுக்கு விளக்க மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் தம்ம சேஷாத்ரி நாயுடு கோரிக்கை விடுத்தார்.
தமிழக அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன் வந்து பதிவு செய்த வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு விசாரிக்க தொடங்கி உள்ளதால், இந்த பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க தேவையில்லை. தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதிகள், விளக்கமான மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு 2 வாரங்கள் அவகாசம் அளித்ததுடன், வழக்கு விசாரணையை மார்ச் 5-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.