Paristamil Navigation Paristamil advert login

அச்சத்தின் காரணமாக சட்டப்பிரிவு 370 அமல்படுத்தப்பட்டது... - பரூக் அப்துல்லா

அச்சத்தின் காரணமாக சட்டப்பிரிவு 370 அமல்படுத்தப்பட்டது... - பரூக் அப்துல்லா

9 தை 2024 செவ்வாய் 02:08 | பார்வைகள் : 2572


இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 370, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற வழிவகை செய்கிறது. இந்நிலையில் பஞ்சாப் மக்கள் பிரிவினைக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு குடிபெயர்ந்து அங்கு குடியேறலாம் என்ற அச்சத்தின்  காரணமாக 370 வது பிரிவு அமல்படுத்தப்பட்டது என்று தேசிய மாநாட்டு கட்சித்தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரியுமான பரூக் அப்துல்லா தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஜம்முவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "நாங்கள் சட்டப்பிரிவு 370 ஐ கொண்டு வரவில்லை. இது 1947 இல் மகாராஜா ஹரி சிங்கால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது. பிரிவினைக்குப் பிறகு பஞ்சாப் மக்கள் இங்கு வந்து குடியேறிவிடுவார்கள், எங்கள் மாநிலத்தின் ஏழை மக்கள் தங்கள் சொந்தங்களை விற்றுவிடுவார்கள் என்ற பயத்தில்தான் இது நடந்தது. 

பிரிவினைக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரின் ஏழை மக்களைக் காப்பாற்ற சட்டப்பிரிவு 370 ஐ மகாராஜா ஹரி சிங் அறிமுகப்படுத்தினார். அவர் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உள்ளூர் மக்களுக்கு மட்டுமே வேலைகளை ஒதுக்கினார்" என்று அவர் கூறினார்.

முன்னதாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசின் முடிவை 2023 டிசம்பரில் சுப்ரீம்கோர்ட்டு உறுதி செய்தது.

இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 370வது சட்டப்பிரிவை ரத்து செய்யும் அரசின் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான இந்த தீர்ப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்