அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் தினமும்! விசாரணை
9 தை 2024 செவ்வாய் 17:10 | பார்வைகள் : 2645
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகளில், தி.மு.க., அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். அ.தி.மு.க.,வின் பன்னீர்செல்வம், வளர்மதி ஆகியோரும் விடுவிக்கப்பட்டனர்.
இவர்களை விடுவித்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ஆய்வு செய்யும் விதமாக, சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறு விசாரணைக்கு எடுத்தார்.
வழக்கை முடித்து வைக்க கோரும் அறிக்கையின் அடிப்படையில், சிறப்பு நீதிமன்றங்கள் விடுவிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளன.
வழக்கை முடித்து வைக்குமாறு லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை தாக்கல் செய்வது சட்டப்பட சரியா; அந்த அறிக்கையை சிறப்பு நீதிமன்றம் ஏற்றது சட்டப்படி சரியா; குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க சட்ட அதிகாரத்தை செயல்படுத்தியதில், சிறப்பு நீதிமன்றம் தவறு செய்துள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும் என நீதிபதி நேற்று அறிவித்தார்.
ஓய்வு பெற்றார்
எதிர் தரப்பில் ஆட்சேபனை அல்லது பதில் மனுவை 31-க்குள் தாக்கல் செய்ய வேண்டும்; நான்கு வழக்குகளிலும், பிப்ரவரி 5 முதல் 9ம் தேதி வரை தினமும் பிற்பகல் 3:00 மணிக்கு இறுதி விசாரணை நடக்கும் என நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலருக்கு வீட்டுவசதி வாரிய நிலத்தை ஒதுக்கியதில் முறைகேடு நடந்த தாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் பெரியசாமி விடுவிக்கப்பட்ட உத்தரவையும் ஆய்வு செய்ய, பிப்ரவரி 12, 13ம் தேதிகளில் பிற்பகல் 3:00 மணிக்கு இறுதி விசாரணை துவங்கும்.
சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து வேலுார் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதை ஆய்வு செய்யும் விசாரணை, பிப்ரவரி 19 முதல் 22 வரை நடக்க உள்ளது.
பொன்முடி வழக்கு விழுப்புரம் கோர்ட்டில் நடந்தது. அதை வேலுார் கோர்ட்டுக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவிட்டது.
வேலுார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வசந்தலீலா வழக்கை விசாரித்து, பொன்முடியை விடுவித்து 2023 ஜூனில் தீர்ப்பு அளித்தார். பின், பணி ஓய்வு பெற்றார்.
பதில் தர உத்தரவு
வழக்கு விழுப்புரத்தில் இருந்து வேலுாருக்கு மாற்றும்படி கோரப்பட்டதா என்பதற்கு பொன்முடி தரப்பும், லஞ்ச ஒழிப்புத் துறையும் இம்மாதம் 31க்குள் பதில் அளிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். வசந்தலீலா நேரிலோ அல்லது வழக்கறிஞர் வாயிலாகவோ ஆஜராகி கருத்து தெரிவிக்கவும் நீதிபதி அனுமதி அளித்தார்.பொன்முடி வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள அனுமதி கோரிய, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மனுவை நீதிபதி நிராகரித்தார்.
தமிழக அரசின்கோரிக்கை நிராகரிப்பு
'தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடி புகார்கள் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, கருப்பையா என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இதற்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கோரியது. நீதிபதிகள் சூர்ய காந்த், கே.வி. விஸ்வநாதன் அமர்வில், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
'மனுவில் கூறப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பாக, நீதிமன்றங்கள் ஏற்கனவே விசாரித்துள்ளன. தற்போது, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டால், அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். அதனால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிட்டார். அதை ஏற்க மறுத்த அமர்வு, வழக்கின் விசாரணையை, மார்ச் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.