இருளில் மூழ்கிய உக்ரைன் நாட்டின் 1000 நகரங்கள்
10 தை 2024 புதன் 09:50 | பார்வைகள் : 2714
உக்ரைன் நாட்டில் பாரிய பனிப்பொழிவு நிலவி வருகின்றது.
இந்த பனிப்பொழிவு, பலத்த காற்று உள்ளிட்ட காரணங்களால் 1,025 குடியிருப்பு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
அத்துடன், கடும் பனிப்பொழிவு காரணமாக உக்ரைனின் 9 பிராந்தியங்களில் சுமார் 1000 நகரங்கள் மற்றும் கிராமங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய தாக்குதல்களால் மின்சக்தி அமைப்பு பலவீனமடைந்துள்ளதாகவும், இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும் குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை சுமார் -15 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளதால், இந்த வாரத்தில் மின்சார நுகர்வு மிக அதிகமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.
மேலும், காலையில் மின்சார நுகர்வு ஏற்கனவே முந்தைய நாளை விட 5.8 சதவிகிதம் அதிகமாக இருந்ததாகவும் கூறுகின்றனர்.
மக்கள் ஒரே நேரத்தில் பல மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய உக்ரைன் அண்டை நாடுகளான ருமேனியா மற்றும் ஸ்லோவாக்கியாவிலிருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது.
மேலும், உக்ரேனிய அனல் மின் நிலையங்கள் கடந்த குளிர்காலத்தின் போது பாரிய ரஷ்ய தாக்குதல்களிலிருந்து இன்னும் மீண்டு வருவதாகவும், மோசமான வானிலை காரணமாக சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் முழு திறனுடன் செயல்பட முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
கடந்த குளிர்காலத்தில் ரஷ்யா உக்ரேனிய மின் அமைப்பை ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் தாக்கியது, இதனால் மில்லியன் கணக்கான மக்கள் அடிக்கடி இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.