4 வயது மகனை கொலை செய்தது ஏன்? கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்!
11 தை 2024 வியாழன் 00:47 | பார்வைகள் : 2106
தன் 4 வயது மகனை கொலை செய்தது ஏன் என்பது குறித்து, கைதான ஐ.டி., நிறுவன பெண் அதிகாரி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சிறுவன் உடல் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டு, நேற்று பெங்களூரில் எரியூட்டப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில், 'மைண்ட்புல் ஏ.ஐ., லேப்' என்ற நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியவர் சுசனா சேத், 39. இவரது மகன் சின்மய் ரமணன், 4.
பரிசோதனை
கடந்த 6ம் தேதி மகனுடன் கோவாவுக்கு, சுசனா சுற்றுலா சென்றார். அங்கு நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கினார்.
இந்நிலையில், 7ம் தேதி மகனை அவர் கொலை செய்தார். உடலை சூட்கேசில் அடைத்து, 8ம் தேதி வாடகை காரில் பெங்களூரு கிளம்பினார்.
அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் ரத்தக்கறை இருந்ததால், சந்தேகம் அடைந்த ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார், சுசனா பயணித்த கார் டிரைவரிடம் மொபைல் போனில் பேசினர். அவர்கள் அறிவுரைப்படி, சுச்சனாவை கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா, ஐமங்களா போலீசாரிடம், கார் டிரைவர் ஒப்படைத்தார். கார் டிக்கியில் இருந்த சூட்கேசில் சின்மய் உடல் இருந்தது.
சுசனா கைது செய்யப்பட்டு, கோவா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். சின்மய் உடல், பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் பணிபுரியும் சுசனாவின் கணவர் வெங்கட்ரமணாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் நேற்று முன்தினம் இரவு சித்ரதுர்கா வந்தார். பிரேத பரிசோதனை முடிந்ததும், சின்மய் உடல், அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சித்ரதுர்காவில் இருந்து ஆம்புலன்ஸ் வாயிலாக, பெங்களூருக்கு சின்மய் உடல் நேற்று வந்தது. நேற்று மதியம் உடல் எரியூட்டப்பட்டது. அப்போது, அவனது தந்தை கதறி அழுதார். அவரை உறவினர்கள் சமாதானப்படுத்தினர்.
அனுமதி
இதற்கிடையில் கோவா போலீசாரிடம் சுசனா அளித்துள்ள வாக்குமூலம்:
எனக்கும், கணவர் வெங்கட்ரமணாவுக்கும், கருத்து வேறுபாடு உள்ளது. விவாகரத்து வழக்கு, விசாரணையில் உள்ளது.
சின்மயை நேரில் சந்தித்து பேசவும், வாரந்தோறும் ஞாயிறு அன்று, வீடியோ காலில் பேசவும், வெங்கட்ரமணாவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.
என் மகனிடம், வெங்கட்ரமணா பேசுவது எனக்கு பிடிக்கவில்லை. மகனை என்னிடம் இருந்து பிரித்து விடுவாரோ என்ற பயம் இருந்தது. நாங்கள் கோவாவில் இருந்த போது, 7ம் தேதி வெங்கட்ரமணா வீடியோ காலில் அழைத்தார்.
சின்மயிடம் போனை கொடுக்கும்படி கூறினார். சின்மய் துாங்குவதாக பொய் கூறினேன். ஆனால், அருகில் படுத்திருந்த சின்மய், தந்தையிடம் பேச போனை தரும்படி கேட்டான். இதனால், கோபத்தில் அவனது முகத்தை, தலையணையால் அழுத்தினேன்; மூச்சுத்திணறி இறந்து விட்டான்.
வேண்டும் என்றே கொலை செய்யவில்லை. எதிர்பாராத விதமாக நடந்து விட்டது. அவன் இறந்த பின் என்ன செய்வது என்று தெரியவில்லை. கையில் கத்தியால் அறுத்து, தற்கொலைக்கு முயன்றேன். துணிச்சல் வரவில்லை.
பின் சின்மய் உடலை, பெங்களூரு கொண்டு செல்ல நினைத்தேன். கையை அறுத்த இடத்தில், துணியை வைத்து சுற்றினேன்.
சின்மய் உடலுடன் பெங்களூரு வந்ததும் தற்கொலை செய்யவும் திட்டமிட்டு இருந்தேன். அதற்குள் போலீசாரிடம் சிக்கி விட்டேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துஉள்ளார்.