வலுவான கூட்டணி உருவாக்குவதில் பழனிசாமி !!
11 தை 2024 வியாழன் 01:05 | பார்வைகள் : 1938
வலுவான கூட்டணி அமைக்கப் போவதாக கட்சியினருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல், அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி திணறுகிறார். மாநில நிர்வாகிகளையும், மாவட்ட செயலர்களையும் அழைத்து விடிய விடிய ஆலோசனை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை.
அ.தி.மு.க. அணியில், பா.ஜ. - பா.ம.க. - த.மா.கா. புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, புரட்சி பாரதம் என பல கட்சிகள் இருந்தன. 2021 சட்டசபை தேர்தல் முடிந்ததும, பா.ம.க. கழன்று கொண்டது. உள்ளாட்சி தேர்தலில் 'சீட்' பங்கீடு மோதலால் பா.ஜ. தனியாக போய் விட்டது. <br>லோக்சபா தேர்தலில் மீண்டும் இணைவோம் என இரு தரப்பு தலைமையும் கூறியதை தொண்டர்களும் நம்பினர்.
உத்தரவாதம்
ஆனால், அடுத்து இரு தரப்பிலும் சிலர் நடத்திய சொற்போர் விளைவாக பா.ஜ. - அ.தி.மு.க. இடைவெளி பெரிதாகி, அண்ணாமலையை காரணம் காட்டி பா.ஜ. உறவை அ.தி.மு.க. முறித்துக் கொண்டது.
மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பா.ஜ.வை விலக்கியதால் கட்சியினர் சோர்ந்துவிடக் கூடாது என்பதால், 'லோக்சபா தேர்தலுக்கு வலுவான கூட்டணியை ஏற்படுத்துவோம்' என்று நிர்வாகிகள் கூட்டங்களில் பழனிசாமி கூறி வருகிறார்.
அதற்கான முயற்சியின் துவக்கமாக, மதுரையில் நடந்த எஸ்.டி.பி.ஐ. மாநாட்டில் பங்கேற்றார். 'லோக்சபா தேர்தல் மட்டுமல்ல; அடுத்து 2026 சட்டசபை தேர்தலிலும், பா.ஜ. கூட்டணி இல்லை' என உத்தரவாதம் அளித்து, சிறுபான்மையினருக்கு வலை வீசினார்.
தி.மு.க. அணியில் உள்ள சில கட்சிகள் அதிருப்தியால் வெளியே வந்து அ.தி.மு.க. அணியில் சேரும் என்று அவர் எதிர்பார்த்தார். இந்த நிமிடம் வரை அதற்கான அறிகுறி தென்படவில்லை. தி.மு.க. மீது அதிருப்தி இருந்தாலும், கூட்டணியை விட்டு வெளியேறும் மனநிலைக்கு எந்த கட்சியும் வரவில்லை.
ஆதங்கம்
பஸ் ஊழியர் போராட்டத்தை முன்னின்று நடத்துவது தி.மு.க.வின் தோழமை கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்டுப்பாட்டில் உள்ள சி.ஐ.டி.யு. சங்கம் என்பதால், அதனுடன் கைகோர்த்து மக்களின் கோபத்தை அரசு மீது திருப்பி விடும் அ.தி.மு.க.வின் திட்டமும் ஈடேறவில்லை.
இதனால் புரட்சி பாரதம் தவிர வேறு துணையின்றி நிற்கிறது அ.தி.மு.க. ராமதாஸ், பிரேமலதா, சீமானுக்கு துாது அனுப்பி விட்டு, பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறார் பழனிசாமி.
'போயஸ் கார்டனில் நுழைய அனுமதி கிடைக்காதா என கட்சிகள் காத்திருந்த காலம் மாறி, எம்.ஜி.ஆர். மாளிகையின் கதவை திறந்து வைத்து காத்திருக்க வேண்டிய நிலை வந்து விட்டதே' என்று பழனிசாமியிடமே ஆதங்கத்தை பகிர்ந்திருக்கிறார் ஒரு முன்னணி தலைவர்.
என்றாலும் பழனிசாமி எந்த ஏமாற்றத்தையும் காட்டிக் கொள்ளாமல் சுற்றி சுழல்கிறார்.
பின்னடைவு
மாவட்ட செயலர்களை அழைத்து, விடிய விடிய பேசினார். 'என்னை நம்பி தேர்தல் வேலையை மட்டும் பாருங்கள்' என தைரியம் கூறி அனுப்பியுள்ளார்.
போட்ட திட்டத்தின் பின்னடைவு குறித்து கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் போன்றவர்களை வீட்டுக்கு அழைத்து அடுத்த கட்டம் பற்றி மனம் விட்டு பேசி இருக்கிறார்.
அ.தி.மு.க. உறவு புதுப்பிக்கப்படும் என மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் சென்னையில் பேசியது குறித்தும் விவாதித்துஉள்ளனர்.