தலைமுடியில் தடவப்படும் கெமிக்கல்களால் புற்றுநோய் ஏற்படுமா..?
11 தை 2024 வியாழன் 14:37 | பார்வைகள் : 2326
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தங்களது தலைமுடியை ஸ்ட்ரெய்ட்னிங் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். சமீப காலமாக இந்த போக்கு பெண்களிடையே அதிகரித்து காணப்படுகிறது. ஆனால் ஹேர் ஸ்ட்ரெய்ட்னிங் ப்ராடக்ட்டுகளை தலைமுடியில் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் பற்றி யோசிப்பதற்கு பெண்கள் மறந்து விடுகின்றனர்.
தலைமுடியை ஸ்ட்ரெய்ட்டனிங் அல்லது மென்மையாக்க பெரிய அளவிலான கெமிக்கல்கள் தலைமுடியில் தடவப்படுகின்றது. இது உடல் நலத்திற்கு பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைகின்றது. இன்னும் குறிப்பிட்டு சொல்லப் போனால் அவை புற்றுநோயை உண்டாக்க கூடும் அபாயத்தை கூட ஏற்படுத்தலாம். இதனால் ஹேர் ஸ்ட்ரெய்ட்னிங் அல்லது ஸ்மூத்திங் ப்ராடக்ட்டுகளின் பயன்பாடுகளை தடை செய்வது குறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பரிந்துரை செய்து வருகிறது.
ஹேர் ஸ்ட்ரெய்ட்னிங் செயல்முறைகளில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்கள் பற்றி சில விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம். கெமிக்கல் ஸ்ட்ரெய்ட்னர்கள் அல்லது ரிலாக்ஸர்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் ஹேர் ஸ்ட்ரெய்ட்னிங் ப்ராடக்ட்டுகளில் ஃபார்மால்டிஹைடு அல்லது பிற கெமிக்கல்கள் தலைமுடியை நேராக்க பயன்படுத்தப்படுகின்றன.
இந்த ப்ராடக்ட்டுகள் தலைமுடிக்கு தற்காலிக பளபளப்பு மற்றும் மென்மையை தருகின்றன. ஆனால் நீண்ட காலத்திற்கு ஃபார்மால்டிஹைடு கெமிக்கல்களை நாம் பயன்படுத்துவதால் மூக்கு மற்றும் தொண்டை புற்று நோய்கள் போன்ற ஒரு சில கேன்சர்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
எனினும் ஹேர் ஸ்ட்ரெய்ட்னிங் ப்ராடக்ட்டுகளில் பயன்படுத்தப்படும் ஃபார்மால்டிஹைடு அளவுகள் மாறுபடலாம். ஆகவே எல்லா வகையான ப்ராடக்ட்டுகளும் புற்றுநோயை ஏற்படுத்தும் என்று நம்மால் சொல்லிவிட முடியாது. வழக்கமான முறையில் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் ப்ராடக்ட்டுகளை பயன்படுத்தக்கூடிய பெண்களிடையே யூட்டரின் கேன்சர் (Uterine cancer) அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது ஹேர் ஸ்ட்ரெய்ட்னிங் ப்ராடக்ட்டுகளை பயன்படுத்தக்கூடிய பெண்களுக்கு யூட்டரின் கேன்சர் ஏற்படுவதற்கான அபாயம் 4.50 சதவீதமாகவும், இதுபோன்ற ப்ராடக்ட்டுகளை பயன்படுத்தாதவர்களுக்கு 1.64 சதவீதம் ஆகவும் இருக்கிறது.
எனவே ஒருவரது அழகு பராமரிப்பு வழக்கத்தில் இது போன்ற ப்ராடக்ட்டுகளை பயன்படுத்தும் முன்பு அதனால் ஏற்படக்கூடிய உடல்நல தாக்கங்கள் குறித்து தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமாக கருதப்படுகிறது. யூட்டரின் கேன்சர் என்பது கர்ப்பப்பையின் மெல்லிய அடுக்கில் காணப்படும் என்டோமெட்ரியம் என்ற பகுதியில் உண்டாக கூடிய ஒரு புற்றுநோய்.
இந்த புற்றுநோய் பெரும்பாலும் மெனோபாஸ் அடைந்த பெண்களை பாதிக்கிறது. உடலுறவின்பொழுது வழக்கத்திற்கு மாறான ரத்தப்போக்கு, இடுப்பு வலி அல்லது அசௌகரியம் ஏற்படுவது இந்த புற்றுநோயின் சில அறிகுறிகள்.
இதற்கு அமர்ந்தே இருக்கும் வாழ்க்கை முறையும் ஒரு காரணமாக அமைகிறது. ஹேர் ஸ்ட்ரெய்ட்னிங் செய்வதற்கு முன்பு அதுகுறித்த தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்.