லட்சத்தீவுக்கு செல்ல மார்ச் வரை விமான டிக்கெட் ஃபுல் : டல் லடிக்குது மாலத்தீவு
12 தை 2024 வெள்ளி 03:32 | பார்வைகள் : 2244
லட்சத்தீவு கடற்கரையை பிரதமர் மோடி வர்ணித்ததையடுத்து, அங்கு சுற்றுலா செல்ல மக்கள் குவிய துவங்க உள்ளதால் மார்ச் வரை விமான டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்திய பெருங்கடலில் உள்ள குட்டி நாடு மாலத்தீவு இயற்கை அழகு மிகுந்த இடம் என்பதால் சர்வதேச சுற்றுலா பயணமாக இந்தியர்கள் சென்று வந்து கொண்டிருந்தனர். இதனால் இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் நெருக்கமான உறவு இருந்தது. தற்போது மாலத்தீவு புதிய அதிபர் முகமது முய்சு இந்தியாவிற்கு எதிராக சீனாவின் ஆதரவாளராகவே மாறிவிட்டார்.
இந்த சூழ்நிலையில் நம் நாட்டின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு பிரதமர் மோடி சமீபத்தில் சென்றார். கடற்கரையில் வாக்கிங் சென்றும் லட்சத்தீவின் அழகை ரசித்தார் மோடி. அந்த படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். 'சாகச சுற்றுலா விரும்புவோருக்கான இடம் இது' என்றும் வர்ணித்தார். இது இணையத்தில் வைரலானது. ''அடடா, இந்தியாவிலேயே இவ்வளவு அழகான தீவுகள் இருக்கும்போது, மாலத்தீவுக்கு ஏன் போக வேண்டும்?” என சிலர் கேட்டனர். அந்த கருத்து தீயாக பரவி வருகிறது.
இந்நிலையில் லட்சத்தீவு சுற்றுலா தலமாக பிரபலமடைந்துள்ளது. நாடு முழுதும் இருந்து சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல உள்ளனர். தீவுக்கு செல்ல விமானம் மறறும் கப்பல் வழியாக தான் பயணிக்கமுடியும். விமானம் மூலமாக கேரளாவின் கொச்சியிலிருந்து லட்சத்தீவுக்கு
1 மணி 30 நிமிடத்தில் செல்ல முடியும். அங்கு செல்ல அலையன்ஸ் ஏர் என்ற ஒரு விமான நிறுவனம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மார்ச் வரை விமான டிக்கெட் விற்று தீர்ந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.