'அயலான்’ படம் எப்படி?
12 தை 2024 வெள்ளி 11:07 | பார்வைகள் : 1302
விலங்குகள், பூச்சிகள், பறவைகள் என இயற்கையை நேசிக்கும் பூம்பாறை கிராமத்து இளைஞன் தமிழாக சிவகார்த்திகேயன். இவரது அம்மா பானுப்பிரியா. நல்ல வேலை பார்த்து வளர வேண்டும் என்று விரும்பி மகனை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார். சென்னையில், பிறந்தநாளுக்காக சர்ப்ரைஸ் கொடுக்கும் சிறு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர் கருணாகரனும் யோகிபாபும். இவர்களுடன் எதிர்பாராத ஒரு சம்பவத்தால் வந்து சேர்கிறார் சிவகார்த்திகேயன்.
பூம்பாறை கிராமத்தில் தான் சந்தித்த தாராவை (ரகுல் ப்ரீத் சிங்) சென்னையில் பள்ளிக் கண்காட்சி ஒன்றில் சந்திக்கும் தமிழ், அப்போது அங்கு நடக்கும் தீ விபத்தில் மாட்டும் ஒரு ஏலியனை சிறுவன் என நினைத்து காப்பற்றுகிறார்.
பூமிக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு திட்டத்தை வில்லன் ஷரத் கேல்கர், இஷா கோபிகர் குழு வியாபாரமாக்கி விற்க முயற்சிக்கிறது. இதனால் பூமிக்கு மட்டுமல்லாது, தங்கள் யூடூவ் கிரகத்திற்கும் ஆபத்து என இந்த அழிவைத் தடுக்க அங்கிருந்து கிளம்பி வருகிறது இந்த ஏலியன்.
யூடூவ் கிரகத்தில் இருந்து கிடைத்த ஒரு ஸ்பார்க் கல்லை வைத்துத்தான் பூமிக்கடியில் மிக ஆழமாகத் துளையிட்டு நோவா கியாஸை எடுக்க திட்டமிடுகிறது வில்லன் குழு. இதைத் தடுக்கும் முயற்சியில் தனது ஸ்பேஸ் ஷிப்பை ஏலியன் தொலைக்க, தமிழுடன் இணைந்து வில்லன் குழுவை அது எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் ‘அயலான்’.
படம் அறிவித்து ஆறு ஆண்டுகள் ஆகிறது. வெளியான ட்ரெய்லரிலும் பெரிய சுவாரஸ்யம் இல்லை. படம் ஆரம்பிக்கும் காட்சிகளிலும் விவசாயம், விலங்குகள் மீதான அன்பு என சில கிளிஷேவான காட்சிகளோடுதான் தொடங்குகிறது. ஆனால், சிவகார்த்திகேயன் சென்னை வந்த பிறகு குறிப்பாக, ஏலியன் என்ட்ரிக்குப் பிறகு கதை அதகளமாகிறது.
சிவகார்த்திகேயன், ஏலியன், யோகிபாபு, கருணாகரன் கூட்டணியின் கலகல வசனங்கள் முதல் பாதியில் பார்வையாளர்களை கதையோடு கட்டிப் போடுகிறது. பூமியின் வளங்களை வியாபாரமாக்கி மனித இனம் எப்படிப் போனால் என்ன எனப் பணத்தைக் குறி வைக்கும் தமிழ் சினிமாவின் வழக்கமான வில்லன்களாக வரும் ஷரத் கேல்கர், இஷா கோபிகர். இருவரும் டெரர் கூட்டுகின்றனர்.
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகிபாபு, கருணாகரன், ஆர்யன், ஏலியனாக நடித்துள்ள வெங்கட் என நடிகர்கள் அனைவரும் கதைக்குத் தேவையான நேர்த்தியான நடிப்பைக் கொடுத்துள்ளனர். குறிப்பாக, ஏலியனின் க்யூட் ரியாக்ஷன்களும், அதன் கலகல வசனங்களுக்கு சித்தார்த்தின் பின்னணிக் குரலும் பலம் சேர்த்துள்ளது. சிவகார்த்திகேயன்- ஏலியன் பாண்டிங்கும் இயல்பாக வந்துள்ளது. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவுக்கும், ரூபனின் படத்தொகுப்புக்கும் தம்ப்ஸ் அப் தரலாம்.
இரண்டாம் பாதியில் ஏலியனைக் கடத்தும் வில்லன் கும்பல், அதைக் காப்பாற்றும் ஹீரோ என வழக்கமான கிளைமாக்ஸ்தான். என்றாலும் அன்பறிவின் ஸ்டண்ட் காட்சிகளும் ரஹ்மானின் பின்னணி இசையும் பரபரக்க வைக்கிறது. ரஹ்மான் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. சண்டைக் காட்சிகள் தவிர, சில இடங்களில் அவரது இசை ஓவர் டோஸாக இருக்கிறது.
ரகுலின் கதாபாத்திரத்தை இன்னும் வலுவாக எழுதி இருக்கலாம். முதல் பாதியை கலகலப்பாக்கிய ஏலியனுக்கு இரண்டாம் பாதியில் பெரிதாக வேலையில்லை. இரண்டாம் பாதியில் அதை இன்னும் பயன்படுத்தி இருக்கலாமோ என்ற எண்ணம் எழுகிறது. ஊரே பற்றி எரிகிறது. திடீரென விஷவாயு தாக்கி பலர் இறக்கிறார்கள் எனும் போது அதுகுறித்து அரசோ, காவல் துறையோ பெயரளவுக்குக் கூட அக்கறை காட்டியது போன்ற காட்சிகள் படத்தில் இல்லை என்ற லாஜிக் ஓட்டைகளும் படத்தில் இருக்கிறது.
இத்தனை வருடம் காக்கவைத்ததை குறைசொல்லமுடியாத அளவுக்கு விஎஃப்எக்ஸ் காட்சிகளைக் கொடுத்திருக்கிறது பிஜாய் அற்புதராஜின் பாண்டம் எஃப்எக்ஸ் குழு. “பூமியை நீங்க அழிப்பீங்க, அதை ஏலியன் நான் வந்து காப்பாத்தணுமா?”, “மனுஷங்கள்ல நல்லவங்களும் இருக்காங்க... எல்லோரும் கெட்டவங்க இல்ல” என்பது போன்ற வசனங்கள் கவனம் ஈர்க்கிறது.
வழக்கமான ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் கதையை சிக்கல் இல்லாமல் நேர்த்தியாக எடுத்துச் சென்றிருப்ப்பதில் ’இன்று நேற்று நாளை’ படத்திற்குப் பின் மீண்டும் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் ரவிகுமார். சில குறைகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் முதல் பாதி கலகலப்பாகவும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும் செல்கிறது ‘அயலான்’.