Paristamil Navigation Paristamil advert login

மக்களின் மகிழ்ச்சியே எனக்கு மருந்து: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மக்களின் மகிழ்ச்சியே எனக்கு மருந்து: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

12 தை 2024 வெள்ளி 11:39 | பார்வைகள் : 2078


தமிழகமும், மக்களும் மகிழ்ச்சியாக இருக்கிறபோது, எனக்கு என்ன குறை. மக்களின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சிதான் எனக்கு மருந்து'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் 'அயலகத் தமிழர் தினம்-2024' விழா நடைபெற்றது. இதில், 218 சர்வதேச தமிழ் சங்கங்கள், 48 பிற மாநில தமிழ் சங்கங்கள் பங்கேற்றன. இவ்விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், அயலக தமிழர்கள் 8 பேருக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். பின்னர் அவர் பேசியதாவது: வெள்ள நிவாரணம் 6 ஆயிரம், மகளிர் உரிமை தொகை ஆயிரம், பொங்கல் பரிசு ஆயிரம் என ஒரு மாதத்தில் மட்டும் 8 ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. 

எனக்கு உடல்நிலை சரியில்லை என பத்திரிகையில் எழுதியிருந்ததை பார்த்ததும் சிரிப்பு தான் வந்தது. தமிழகமும், மக்களும் மகிழ்ச்சியாக இருக்கிறபோது, எனக்கு என்ன குறை. மக்களின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சிதான் எனக்கு மருந்து. என் சக்தியை மீறியும் உழைத்துக்கொண்டே இருப்பவன் நான். உலகமே வளம் பெற அயலக தமிழர் மாநாடு நடந்து வருகிறது. தேர்தல் அறிக்கையில் கூறியபடி, அயலக தமிழர் நலத்துறை கொண்டு வரப்பட்டது. 'முயற்சி உடையார், இகழ்ச்சி அடையார்' என்பதே தமிழர்கள் கடல் கடந்து கோலோச்ச காரணம். 

தமிழர் இணைய கல்வி கழகம் மூலம் வெளிநாடு வாழ் தமிழர் குழந்தைகளுக்கு தமிழ் கல்வி வழங்கப்படுகிறது. வெளிநாடு வாழ் தமிழர்கள் இங்குள்ள நில பிரச்னையை தீர்க்க டிஜிபி அலுவலகத்தில் தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் பேரிடர்களில் சிக்கும் தமிழர்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதேபோல், அயலக தமிழர்களின் குறைகளை களைய உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எங்கு வாழ்ந்தாலும் தாய் தமிழ்நாட்டை மறக்காதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்