இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்
12 தை 2024 வெள்ளி 11:46 | பார்வைகள் : 2521
நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், மேம்படுத்துதல் என நாடு முழுவதும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியான முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயரிடப்பட்ட 'அடல் சேது' என்ற கடல் பாலமும் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணி 2018-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கியது. சுமார் 5 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் கட்டுமான பணிகள் கடந்த மாதம் முடிவடைந்தது.
மும்பையில் உள்ள தீவு நகரான சேவரியில் இருந்து ராய்காட் மாவட்டம், உரான் தாலுகாவில் உள்ள நவா சேவாவில் இந்தபாலம் முடிவடைகிறது. இந்த திட்டம் ரூ. 18 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மொத்த நீளம் 22 கி.மீட்டர் ஆகும். இந்தியாவிலே மிக நீளமான கடல் பாலம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. உலக அளவில் 7-வது நீளமான பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இந்தப் பாலம் ஆறு வழித்தடங்களைக் கொண்டுள்ளது.
இதற்கிடையே 'அடல் சேது' பாலத்தில் பயணம் செய்வதற்கான சில விதிகளை மும்பை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளனர். இந்த பாலத்தில் நான்கு சக்கர வாகனங்களுக்கான அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 100 கி.மீ. ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பைக், ஆட்டோ ரிக்சாக்கள், டிராக்டர்கள் உள்ளிட்ட மெதுவாக செல்லக்கூடிய வாகனங்கள் இந்த கடல் பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதில் மாராட்டிய மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரிகள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் ஆகியோர் கலந்து கொண்டனர்.