Paristamil Navigation Paristamil advert login

கேப்டன் மில்லர் படம் எப்படி இருக்கிறது? தனுஷ் அசர வைத்தாரா?

கேப்டன் மில்லர்  படம் எப்படி இருக்கிறது? தனுஷ் அசர வைத்தாரா?

13 தை 2024 சனி 06:59 | பார்வைகள் : 1344


பொங்கல் படங்களில் மாறுபட்ட படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். வழக்கமான கமர்ஷியல் படங்களிலிருந்து மாறுபட்ட ஒரு படம். சுதந்திர போராட்டம் நடந்து கொண்டிருந்த போது ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து போராடிய கூட்டம், மக்களை அடங்க வைத்தே வாழ வைக்க வேண்டும் என நினைக்கும் மன்னர் பரம்பரை, கொள்ளையடித்து வாழும் ஒரு கூட்டம் ஆகியோருக்கு இடையில் சிக்கித் தவிக்கும் ஊர் மக்கள் என ஒரு படத்திற்குள் ஒரு கதையை வைக்காமல் சில பல கதைகளை சேர்த்து வைத்திருக்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.

ஒடுக்கப்பட்டு வாழ்வதை விட ஆங்கிலேயரின் படையில் சிப்பாய் ஆக சேரலாம் என செல்கிறார் தனுஷ். பயிற்சி முடிந்ததும் சுதந்திரத்திற்காகப் போராடும் நம் மக்களையே கொல்லச் சொல்கிறது ஆங்கில அரசாங்கம். அதனால் கோபமடைந்து ஆங்கிலேயே அதிகாரியைக் கொன்றுவிட்டு ஊர் ஊராகத் திரிந்து கொள்ளைக் கூட்டத்துடன் சேர்கிறார் தனுஷ். அவரைத் தேடும் ஆங்கிலேயே கூட்டத்திற்கு சிம்ம சொப்பனமாய் இருக்கிறார். அவரால் ஊருக்கும், ஊர் மக்களுக்கும் சிக்கல் வருகிறது. அம்மாவின் ஆசை ஒன்றை நிறைவேற்ற நினைக்கும் தனுஷ் அதற்காக மீண்டும் ஊருக்கு வருகிறார். அவரைத் தேடி வரும் ஆங்கிலேயப் படைகளை எதிர்த்து நிற்கிறார். அதன்பின் என்ன என்பது மீதிக் கதை.

படத்தின் கதைக்களம், உருவாக்கம், கதாபாத்திரங்கள், அதற்கான நடிப்பு என வேறு வித தமிழ் சினிமாவைக் காட்டுவதில் கவனமாக இருந்திருக்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். 600 வருடங்களாக கோயிலுக்குள் செல்ல முடியாமல் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை மீண்டும் கோயிலுக்குள் செல்ல வைக்க நாயகன் எடுக்கும் முயற்சிதான் படத்தின் மையக் கதை. ஆனால், அதை ஆங்கிலேயர்களின் அராஜகம், சுதந்திர போராட்டம், கொள்ளைக் கூட்டம், அப்பாவி ஊர் மக்கள் என பலவற்றைச் சேர்த்து கதை சொல்லியிருக்கிறார்.

கேப்டன் மில்லர் கதாபாத்திரத்தில் தனுஷின் நடிப்பை ஒற்றை வார்த்தையில் 'மிடுக்கு' என சொல்லிவிடலாம். சில பல தோற்றங்களில் படத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு தோற்றமும் அவருக்குப் பொருத்தமாக அமைந்துள்ளது. அவரது உருவத்திற்கான ஹீரோயிசம் என்பது படத்தில் மிதமிஞ்சி உள்ளது. அந்த ஹீரோயிசத்தை நம்பும் அளவிற்கு வெளிப்படுத்தி இருக்கிறார் தனுஷ்.

தனுஷ் தவிர மற்றவர்களை மற்ற கதாபாத்திரங்கள் என்ற வரிசையில்தான் சேர்க்க வேண்டும். அந்த அளவிற்கு மற்ற நடிகர்கள், நடிகைகள் குறைவான நேரங்களில்தான் படத்தில் இடம் பெற்றுள்ளார்கள். பிரியங்கா மோகன் தனுஷின் ஜோடி கிடையாது. சுதந்திரத்திற்காகப் போராடும் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஒரு டாக்டர். தனுஷின் அண்ணனாக சிவராஜ்குமார். ஆங்கிலேயர்களை எதிர்த்து சுதந்திரத்திற்காகப் போராடுபவர். தனுஷுடன் சிப்பாய் பயிற்சியில் ஒன்றாகப் பயிற்சி பெற்றவர் சந்தீப் கிஷன். தனுஷை தங்களது கொள்ளைக் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளும் தலைவன் குமரவேல். அந்தக் கூட்டத்திலிருக்கும் நிவேதிதா சதீஷ். இப்படி சில கதாபாத்திரங்கள் குறைவான நேரங்களில் வந்தாலும் அவர்களது நடிப்பை அழுத்தமாய் பதிவு செய்துள்ளார்கள்.

படத்தை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு செல்வது ஜிவி பிரகாஷ்குமாரின் இசை. தமிழில் இதற்கு முன் இப்படி ஒரு பின்னணி இசையை அவர் கொடுத்ததில்லை என தாராளமாகக் குறிப்பிடலாம். ஒளிப்பதிவு செய்திருப்பவர் சித்தார்த் நுனி. எவ்வளவு கடுமையான சூழலில் அவர் பணிபுரிந்திருப்பார் என்பது படத்தைப் பார்க்கும் போது புரியும். அந்தக் காலத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் கலை இயக்குனர் ராமலிங்கம்.

படத்தின் திரைக்கதையை சாமானிய ரசிகரும் புரிந்து கொள்ளும் விதத்தில் அமைக்காமல் சுற்றி வளைத்த திரைக்கதையாக அமைத்து கொஞ்சம் குழப்பியடிக்கிறார் இயக்குனர். பல காட்சிகள் துண்டு துண்டாக நகர்ந்து போவதும் படத்தை ஒன்றிப் பார்ப்பதில் தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அளவுக்கதிகமான வன்முறைக் காட்சிகள், நினைத்த போதெல்லாம் துப்பாக்கியைத் தூக்கி சுட்டுக் கொல்வது, சில சினிமாத்தனமான காட்சிகள் படத்தை பின்னோக்கியும் இழுத்துச் செல்கிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்