Paristamil Navigation Paristamil advert login

தனித்தே போட்டி: தேர்தலுக்கு பிறகு கூட்டணி குறித்து பரிசீலனை : மாயாவதி

தனித்தே போட்டி: தேர்தலுக்கு பிறகு கூட்டணி குறித்து பரிசீலனை : மாயாவதி

15 தை 2024 திங்கள் 08:58 | பார்வைகள் : 2420


வரும் லோக்சபா தேர்தலில் தனித்தே போட்டியிடுவதாகவும், தேர்தல் முடிந்த பிறகு கூட்டணி குறித்து பரிசீலிக்கலாம் என்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்தார்.

பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‛இண்டியா' என்ற கூட்டணியை உருவாக்கின. இதில் காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, ஜனதா தளம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியும் இக்கூட்டணியில் இணைய வேண்டும் என இண்டியா கூட்டணியினர் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், லோக்சபா தேர்தலில் தனித்தே போட்டியிடுவதாக கடந்த ஆகஸ்ட் மாதமே மாயாவதி தெரிவித்தார்.

இந்த நிலையில், கடந்த 12ம் தேதி காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி இடையே நடைபெற்ற லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில், ‛‛மாயாவதி, பா.ஜ.,வை உண்மையாகவே எதிர்ப்பதாக கருதினால், பகுஜன் சமாஜ் கட்சி இந்தியா கூட்டணியில் இணைய வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சிக்கு மோடியை எதிர்க்க துணிவில்லை என்றால் பரவாயில்லை'' எனக் கூறியிருந்தார்.

தனித்தே போட்டி

இதனால் தனித்து போட்டியிடும் முடிவை பரிசீலனை செய்து இண்டியா கூட்டணியில் மாயாவதி இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (ஜன.,15) செய்தியாளர்களிடம் மாயாவதி கூறியதாவது: மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து அவர்களின் வறுமையைப் போக்குவதற்கு பதிலாக மத்திய மற்றும் மாநில அரசுகள் இலவசங்களைக் கொடுத்து மக்களை அடிமைகளாக வைத்திருக்க முயற்சிக்கின்றன.

எங்களது அனுபவத்தில் கூட்டணிகள் எப்போதும் எங்களுக்கு பலன் அளித்ததில்லை. கூட்டணியால் நாங்கள் இழந்ததே அதிகம்.  இந்த காரணத்தினால் நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகள் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புகின்றன. தேர்தல் முடிந்த பிறகு கூட்டணி குறித்து பரிசீலிக்கலாம். வரும் லோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும்.  வாய்ப்பிருந்தால் தேர்தலுக்குப் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி மற்ற கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும். 

இவ்வாறு அவர் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்