ஜேர்மனியில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம்
15 தை 2024 திங்கள் 12:35 | பார்வைகள் : 2728
ஜேர்மனியில், லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவதற்கு அரசாங்காமானது ஆலோசித்து வருகின்றது.
இந்நிலையில், அதை எதிர்த்து ஜேர்மன் நகரமொன்றில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுதிரண்டனர்.
கடந்த நவம்பரில், பெர்லினுக்கு வெளியே, வலதுசாரிக் கட்சியான AfD கட்சியினர் சிலர், தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த சிலர் உட்பட, பலர் கூட்டம் ஒன்றில் பங்கேற்றுள்ளனர்.
அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள், ஜேர்மனியில் வாழும் புலம்பெயர்ந்தோர் முதல் ஜேர்மானியக் குடியுரிமை பெற்ற புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள் வரை அனைவரையும் ஜேர்மனியிலிருந்து நாடுகடத்துவது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டதாக ஊடகங்கள் சமீபத்தில் வெளியிட்ட செய்தியால் நாடே பரபரப்பானது.
இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, நேற்று, ஜேர்மன் தலைநகர் பெர்லினுக்கருகிலுள்ள Potsdam நகரில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் சதியாலோசனையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஜேர்மன் சேன்சலரான ஓலாஃப் ஷோல்ஸும், ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான அனலேனா பேர்பாக்கும் அடங்குவர் என்பதுதான்.
அனலேனா, ஆர்ப்பாட்டம் நடைபெற்ற Potsdam தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.