Paristamil Navigation Paristamil advert login

தைப்பொங்கல் திருநாள்: தமிழகம் முழுவதும் உற்சாகம்

தைப்பொங்கல் திருநாள்: தமிழகம் முழுவதும் உற்சாகம்

15 தை 2024 திங்கள் 13:05 | பார்வைகள் : 1188


இன்று தைப்பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

ஆண்டு தோறும் தை முதல் நாள் கெண்டாடப்படும் தைப்பொங்கல் தமிழர்களின் முக்கியமான பாரம்பரிய பண்டிகையாக கருதப்படுகிறது. பொங்கல் பண்டிகை தமிழகத்தில் போகி பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்களாக கொண்டாடப்படுகிறது. 

பொங்கலுக்கு முதல் நாள் வரும் போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை நீக்கியும், வீட்டினை சுத்தம் செய்தும் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் தயார் ஆவார்கள். அன்று மாலை வீட்டின் நிலைக்கதவுக்கு மேலே கூரைப்பூ, மாவிலை, தும்பை, வேப்பிலை, நாயுருவி போன்றவற்றை கொண்டு தயார் செய்த காப்பு கட்டினை கட்டுவார்கள். இதன் மூலம் பாதுகாப்பும், தெய்வத்தின் அருளும் கிடைக்கும் என நம்பப்படுகிறது. 

நம் வாழ்வுக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தை மாதம் முதல் நாளில் தங்கள் வீடுகளில் சர்க்கரை பொங்கல் சமைத்தும், கரும்புகளை சாத்தியும் தேங்காய், பழம், வைத்து சூரியனை வழிபடுகின்றனர். பெண்கள் தங்கள் வீடுகளுக்கு முன்னால் வண்ணக் கோலங்களை வரைந்து பொங்கலை மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். 

பொங்கல் பண்டிகையின் முக்கிய அங்கமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும். இதில் பயிற்சி பெற்ற காளைகள் ஜல்லிக்கட்டு மைதானத்தில் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்படும். காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், வெற்றி பெறும் காளைகளுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.

பரீஸ் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை பரீஸ் தமிழ் டாட் காம் தெரிவித்துக் கொள்கிறது. 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்