அயோத்தி ராமர் கோவிலில் காங்., நிர்வாகிகள் வழிபாடு
16 தை 2024 செவ்வாய் 03:14 | பார்வைகள் : 1497
உத்தர பிரதேசத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க போவதில்லை என காங்கிரஸ் தலைமை அறிவித்த நிலையில் அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் நேற்று அங்கு சென்று வழிபட்டனர்.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கும்பாபிஷேக விழா ஜன. 22ம் தேதி நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
விழாவில் பங்கேற்க நாடு முழுதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமானோருக்கு அயோத்தி ராமர் கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இந்த விழாவை பா.ஜ. தன் அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திக்கொள்ள எண்ணுவதாக காங். உட்பட எதிர்க்கட்சியினர் விமர்சித்ததுடன் இதில் தாங்கள் பங்கேற்க போவதில்லை என்றும் சமீபத்தில் அறிவித்தன.
இந்நிலையில் மகர சங்கராந்தியான நேற்று உத்தர பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். முன்னதாக அவர் சரயு நதியில் புனித நீராடி வழிபட்டார். இதுதவிர அக்கட்சியின் சட்டசபை தலைவர் ஆராதனா மிஸ்ரா அம்மாநில பொறுப்பாளர் தீரஜ் குர்ஜார் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் வந்தனர்.
இதேபோல் காங். மூத்த தலைவர்கள் தீபேந்தர் சிங் ஹூடா அவினாஷ் பாண்டே விமானம் வாயிலாக அயோத்திக்கு சென்று ராமர் கோவிலில் வழிபட்டனர்.