பழங்களை கதிர்வீச்சுக்குள்ளாக்கும் முறை; அமெரிக்காவுக்கு இந்தியா கோரிக்கை
16 தை 2024 செவ்வாய் 03:23 | பார்வைகள் : 2232
மாம்பழம் போன்ற சில பழங்களை கதிர்வீச்சுக்குள்ளாக்கும் முறையை உள்நாட்டு ஆய்வகங்களில் மேற்கொள்ள அனுமதிக்குமாறு இந்தியா அமெரிக்காவிடம் கேட்டு கொண்டுள்ளது.
பழங்களை கதிர்வீச்சுக்குள்ளாக்குதல் என்பது பழங்களில் தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களின் தாக்கத்தை தடுக்கும் ஒரு முறையாகும். இது பழத்தின் தரத்தை பாதிக்காமல் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க உதவுகிறது.
இந்திய ஏற்றுமதியாளர்கள் தற்போது அமெரிக்க துறைமுகங்களில் தங்கள் பழம் உள்ளிட்ட உணவு பொருட்களை கதிர்வீச்சுக்குள்ளாக்கும் முறையை மேற்கொள்ள வேண்டும். இந்த முறையானது ஏற்றுமதியாளர்களின் செலவுகளை அதிகரிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து இம் முறையை இந்திய ஆய்வகங்களில் மேற்கொள்ள அனுமதிக்குமாறு தற்போது கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. இதுகுறித்து உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி நிறுவன துணை நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன்பு உள்நாட்டிலேயே கதிர்வீச்சுக்குள்ளாக்கும் நவீன வசதிகள் இந்தியாவில் உள்ளது.
தமிழகம் குஜராத் மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய இடங்களில் இதற்கான வசதிகள் உள்ளன.
இந்திய ஆய்வகங்களை அனுமதிப்பதன் வாயிலாக ஏற்றுமதியாளர்களுக்கு உண்டாகும் கூடுதல் வர்த்தக செலவுகளை குறைக்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.