அமெரிக்காவுக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்
16 தை 2024 செவ்வாய் 08:54 | பார்வைகள் : 2111
ஏமன் அருகே அமெரிக்காவின் சொந்த சரக்கு கப்பல் மீது ஹவுதி படைகள் ஏவுகணை தாக்குதல் முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தாக்குதலில் குறிப்பிடத்தக்க சேதம் அல்லது ஆள் அபாயம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
தொடர்புடைய கப்பலின் நிர்வாகிகள் தரப்பு தெரிவிக்கையில்,
ஏதன் வளைகுடாவில் இருந்து 100 மைல் தொலைவில் பயணம் செய்யும் போது, அதன் சரக்கு பகுதியில் ஏவுகணை தாக்கியதாகவும் ஆனால் குறிப்பிடும் அளவுக்கு சேதம் ஏற்படவில்லை என்றும் ஊழியர்கள் எவரும் காயமடையவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து தாக்குதலுக்குள்ளான பகுதியில் இருந்து உடனடியாக விலகியதாகவும் Eagle Bulk சரக்கு கப்பல் சேவை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏமனின் செங்கடல் கடற்கரையின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் ஈரான் ஆதரவு ஹவுதிகள் இஸ்ரேலுடன் தொடர்புடையவை அல்லது இஸ்ரேலிய துறைமுகங்களுக்குச் செல்லும் வணிகக் கப்பல்களைத் தாக்கி வருகின்றனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தங்களால் நேரிடையாக களமிறங்க முடியவில்லை என்பதால், இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களை தாக்குவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.
ஆனால் ஹவுதிகளின் இந்த முடிவு பொருளாதார ரீதியாக கடும் தாக்கத்தை ஏற்படுத்துவதை உணர்ந்த அமெரிக்காவும் பிரித்தானியாவும் கடந்த வாரம் திடீரென்று ஏமனில் ஹவுதிகளின் தளங்கள் மீது இரவோடு இரவாக அதிரடி தாக்குதலை முன்னெடுத்தனர்.
ஆனால் அப்படியான தாக்குதல் ஒன்றும் தங்களை கட்டுப்படுத்தாது என சூளுரைத்துள்ள ஹவுதிகள், மீண்டும் தாக்குதலை தொடுத்தனர். அதன் பின்னர் அமெரிக்கா மட்டும் மீண்டும் ஒருமுறை தாக்குதலை முன்னெடுத்தது.
அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஹவுதிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தார். இருப்பினும், அடங்காத ஹவுதிகள் தற்போது அமெரிக்க சரக்கு கப்பல் ஒன்றை ஏவுகணையால் தாக்கியுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளே இஸ்ரேல் சார்பாக பாலஸ்தீன மக்களை கொன்று குவிப்பதாக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய கிழக்கில் சமீப நாட்களாக பதட்டம் அதிகரித்து வருகிறது.