ஆந்திர காங்., தலைவராக சர்மிளா நியமனம்
16 தை 2024 செவ்வாய் 14:55 | பார்வைகள் : 2356
ஆந்திராவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில காங்கிரஸ் தலைவராக, அக்கட்சியில் சமீபத்தில் இணைந்த சர்மிளா ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர், மாநிலத்தை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெகன் மோகனின் சகோதரி ஆவார்.
ஆந்திர முதல்வரான ஜெகன் மோகனின் சகோதரி ஒய்எஸ் சர்மிளா ரெட்டி, தெலுங்கானா மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் தெலுங்கானா என்ற கட்சியை நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன்னர் அவர், கட்சியை காங்கிரசில் இணைத்துக் கொண்டார்.
லோக்சபா உடன் இணைத்து ஆந்திர மாநிலத்திற்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா மாநிலத்தை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி அடுத்ததாக ஆந்திராவிலும் ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக உள்ளது.
இச்சூழ்நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த ருத்ர ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, அம்மாநில காங்கிரஸ் தலைவராக சர்மிளா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால், வரும் நாட்களில் தனது சகோதரர் ஆன ஜெகன்மோகன் ரெட்டியையும், அரசின் செயல்பாடுகளையும் சர்மிளா விமர்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.