Paristamil Navigation Paristamil advert login

கையில் கிடைத்த அனைத்திற்கும் கவர்னர் காவிச் சாயம் பூசுகிறார் - அமைச்சர் ரகுபதி விமர்சனம்

கையில் கிடைத்த அனைத்திற்கும் கவர்னர் காவிச் சாயம் பூசுகிறார் - அமைச்சர் ரகுபதி விமர்சனம்

17 தை 2024 புதன் 03:37 | பார்வைகள் : 1732


திருவள்ளுவர் குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்ட பதிவிற்கு பதிலடியாக தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"தனக்குத் தெரியாத பலவற்றைக் குறித்து, தனக்கு எல்லாம் தெரிந்ததுபோல் பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது மாண்புமிகு கவர்னரின் வாடிக்கை! "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்ற பாரதியின் பாடல் வரிகளில் உள்ள தமிழ்நாடு பெயர் சர்ச்சையில் கடந்த ஆண்டு சிக்கித் தவித்து, எட்டுத்திக்கும் உள்ள தமிழர்களுடைய எதிர்ப்புகளுக்குத் தலைபணிந்து 'இது தமிழ்நாடுதான்' என்று ஒப்புக்கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள் இந்த ஆண்டு வள்ளுவரை வம்புக்கு இழுத்திருக்கிறார்.

பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு வந்த பணிகளைச் செய்யாமல், கையில் கிடைக்கும் அனைத்துக்கும் காவிச் சாயம் பூசிக் கொண்டு இருக்கும் மாண்புமிகு கவர்னர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் பக்கம் இன்று திரும்பியிருக்கிறார்.

ஏதோ பாரம்பர்யமாம்!? அதுதான் ஈராயிரம் ஆண்டுகளாகக் கோடிக்கணக்கான மக்களை ஒடுக்கிய பாரம்பர்யம் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்!

வேதநெறிக்கு எதிரான குறள்நெறி கூறிய அய்யன் வள்ளுவரின் வரலாறே தெரியாமல், கவர்னராக வந்ததாலேயே தான் சொல்வதெல்லாம் வேதம் என்பதைப் போல உருட்டிக் கொண்டிருக்கும் கவர்னர் உடனே காவிக் கட்சியில் சேர்ந்துவிட்டு, அரசியல் பேசலாம். அதற்குக் காலதாமதமாகும் என்றால் அய்யன் திருவள்ளுவர் பற்றி அரிச்சுவடி கூடத் தெரியாமல் பேசுவதை விடுத்து அரசியல் சட்டப்படி நடக்க முயற்சி செய்ய வேண்டும்."

இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்