◉ பாடசாலைகளில் சீருடை, குழந்தை பிறப்பு விடுமுறை, போதைப்பொருள் தடுப்பு - ஜனாதிபதி மக்ரோனின் ஊடக சந்திப்பு!!
17 தை 2024 புதன் 07:00 | பார்வைகள் : 5167
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நீண்ட நாட்களின் பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஊடக சந்திப்பில் ஈடுபட்டார். அதன்போது பாடசாலைகளில் சீருடை, புதிய அரசாங்கம், போதைப்பொருள் தடுப்பு, மகப்பேறுக்கான விடுமுறை என பல விடயங்கள் தொடர்பில் அறிவித்தார்.
பாடசாலைகளில் ‘தனித்துவமான ஆடைகள்’ (Tenue unique) ஒன்றை அடுத்த கல்வி ஆண்டுமுதல் கட்டாயப்படுத்தப்படும் எனவும், தேசியகீதத்தினை (Marseillaise) ஆரம்ப பாடசாலையிலேயே கற்பிக்கப்படுவதை முழுமையாக ஆதரிக்கிறேன் எனவும் தெரிவித்தார்.
100 பாடசாலைகளில் முதல்கட்டமாக சீருடைகள் அறிமுகப்படுத்தப்படும் எனவும், புதிய கல்வி ஆண்டில் அது அதிகரிக்கப்படும் எனவும், 2026 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் நாடு முழுவதும் சீருடைகள் நடைமுறையில் இருக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களை மிகத்தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும், எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்படும் எனவும், வாரத்துக்கு குறைந்தது 10 தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஆண் பெண் சம உரிமையை பேணும் நோக்கில் மகப்பேறு விடுமுறை தற்போது தாய், தந்தை இருவருக்கும் வழங்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
’மகப்பேறு விடுமுறை’ தற்போது ‘பெற்றோர் விடுமுறை’ என பெயர் மாற்றப்பட்டு, ஆறு மாத காலங்களுக்கு இந்த விடுமுறை வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மருத்துவத்துறையில் இருக்கும் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பிலும் ஜனாதிபதி மக்ரோன் சில தவல்களை வெளியிட்டார். அதில் வெளிநாட்டு மருத்துவர்களை தேவை கருதி பயன்படுத்துவது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார். பிரெஞ்சு மக்கள் தங்களின் பணத்துக்கு போதிய மதிப்பில்லை எனும் எண்ணம் கொண்டுள்ளனர். அவற்றில் மருத்துவத்துறை துறை மிகவும் முக்கியமானது. மருத்துவத்துறையில் திருப்திகரமான சேவைகள் இல்லை எனவும் மக்கள் கருதுகின்றனர். எனவே அதன் வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கல்வி அமைச்சரது பிள்ளைகள் தனியார் பாடசாலைகளில் பயில்வது சர்ச்சையாகியுள்ளமை தொடர்பிலும் மக்ரோன் கருத்து வெளியிட்டார்.
‘அவர் விவகாரமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அதற்காக அவர் மன்னிப்பும் கோரியுள்ளார். அவரது பிள்ளைகள் தனியார் பாடசாலைகளில் பயில்வது தொடர்பில் அவர் எடுத்த முடிவு அவரது தனிப்பட்ட முடிவாகும். அதனை நாம் மதிக்கவேண்டும். பெற்றோர்களது நெருக்கமான முடிவினை நாம் மதிக்கவேண்டும் என தெரிவித்தார்.
ஹமாஸின் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்களுக்கு மக்ரோன் தனது இரங்கலை பதிவு செய்ய தவறவில்லை. 41 பேரை நாம் இழந்துள்ளோம். மேலும் மூவர் ஹமாஸிடம் சிறைப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையில், அவர்களை விடுவிக்க நாம் தொடர்ந்தும் போராடி வருகிறோம் என தெரிவித்தார்.