மருத்துவர்களின் சம்பளம் 35000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதா ?
17 தை 2024 புதன் 07:40 | பார்வைகள் : 1771
அரசாங்க சேவையில் உள்ள மருத்துவர்களின் சம்பளம் 35,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ஏனைய சுகாதார தொழில் சங்கங்கள் தமக்கும் 35,000 அதிகரிப்பு தரவேண்டுமென 2 நாள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதும் அதன் பின்னர் இப்போது 16ஆம் திகதி முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ள நிலையில் இது தொடர்பான உண்மை நிலையை ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கம் ஆகும்.
ஊழலினால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் பதவிக்கு வந்த அரசியல் தலைமைகள் சர்வதேச நாணய நிதிய பரிந்துரை என்ற பெயரில் 100,000 ரூபாய்க்கு மேல் மாத சம்பளம் பெறும் அரசாங்க ஊழியர்களின் மீது அதிகரித்த வரி விதித்த நிலையில், அரசாங்க மருத்துவர்களின் சம்பளத்தில் சராசரியாக 35,000 ரூபா வரியாக கழிக்கப்பட்டது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் குறைந்தளவு சம்பளம் பெறும் மருத்துவர்கள், சம்பளம் குறைக்கப்பட்ட இந்த செயலால் அதிருப்தி அடைந்து ஆயிரக்கணக்கில் நாட்டை விட்டு வெளியேற தொடங்கினார்கள்.
இதனால் பல வைத்தியசாலைகள் செயலிழந்துள்ள நிலையில் கலக்கமடைந்த ஆட்சியாளர்கள் இதை ஈடு செய்ய- அதாவது அண்மைக்கால வரி விதிப்புக்கு முன்னர் இருந்த நிலைக்கு வைத்தியர்களது சம்பளமாகப் பெறும் தொகையைக் கொண்டு வருவதற்கு 35,000 வழங்க- தீர்மானித்து விட்டு அதை தான் 35000 ரூபாய்களினால் மருத்துவர்களின் சம்பளம் அதிகரிப்பதாக கண்துடைப்பு செய்கிறார்கள்.
உண்மையில் இது சம்பள அதிகரிப்பு அல்ல.
உதாரணமாக ஒரு மருத்துவ நிபுணரின் சம்பளம் வரியினால் 40000 ரூபாய்களினால் குறைக்கப்பட்டு இருந்தது. இப்போது 35000 ரூபாய் வருமான அதிகரிப்பு என்று கூறிக்கொண்டு மேலும் வரிவிதிப்பை மொத்த சம்பளத்தில் அதிகரிப்பார்கள். இதனால் உண்மையான அதிகரிக்கும் அளவு 25 000 ஆக இருந்தாலும் வரி விதிப்புக்கு முன்னர் இருந்ததை விட அவர் இன்னும் 15000 குறைவாகவே பெறுவார்.
இதேவேளை வரிவிதிப்புக்கு உட்படாத சம்பளத்தை பெறும் மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் (MLT) மற்றும் போராட்டத்தில் ஈடுபடும் ஏனைய தொழில் சங்க உறுப்பினர்கள் உயர்தரத்தில் 3 பாடம் சித்தியுடன் 1 அல்லது 2 வருடத்துக்கு மேற்படாத மாதாந்தக் கொடுப்பனவுடன் கூடிய சுகாதார திணைக்கள பயிற்சி நெறிகளை முடித்துவிட்டு தமது பணிநியமனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இடைநிலை சுகாதார ஊழியர்களான இவர்கள் தங்களை தாங்களே சுகாதார நிபுணர்கள் என்று அழைத்துக் கொண்டு, உயர்தரத்தில் சிரமப்பட்டு படித்து அதிகளவு புள்ளிகளை பெற்று எதுவித மாதாந்தக் கொடுப்பனவுகளும் இன்றி 5 வருடம் மருத்துவ பீட அடிப்படைக் கற்கைகளை நிறைவுசெய்த பின்னர் 1 வருடம் உள்ளகப் பயிற்சி பெற்று வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள மருத்துவர்களுக்கு சமனாக, வரிக்கு உட்படாத தமது சம்பளத்தையும் 35000 ரூபாய்களினால் அதிகரிக்குமாறு கேட்பது எப்படி நியாயம் ஆகும்?
மேலும் நாடு வெள்ள அனர்த்தம் மற்றும் டெங்கு பரவல் காரணமாக ஒரு பேரழிவை எதிர்நோக்கும் நேரத்தில் இவ்வாறான அநியாயக் கோரிக்கைகளை முன்வைத்து போராடுவது சுகாதார ஊழியர்களின் ஒழுக்க நெறிக்கு பொருத்தமானதா ?
இன்றைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, அனைத்து ஊழியருக்கும் அதிகரித்த சம்பளத்தை வழங்குவதை நியாயப்படுத்தி உள்ளது. ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரையான அரச செலவீனங்களை குறைப்பது என்பது பொருளாதாரத்தில் முன்னேறி வரும் ஏனைய நாடுகளை போல பாதுகாப்பு செலவீனங்களை குறைப்பது மூலமாக அடையப் பட்டிருக்க வேண்டும். ஆனால் பாதீட்டில் அண்ணளவாக 50% செலவை பாதுகாப்புக்கு ஒதுக்கிவிட்டு அதை சரி கட்டுவதற்கு அரச ஊழியர்களின் மீதான வரியை அதிகரிப்பது அவ தந்திரமாகும்.
வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டது போல சம்பள உயர்வு தமக்கு வழங்கவேண்டும் என்று கேட்கும் தொழில் சங்கங்கள் கூட பாதுகாப்பு செலவை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வெளிப்படுத்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
அரச ஊழியர்களை செலவுகளை குறைத்து சிக்கனமாக இருக்க உபதேசிக்கும் அரசியல்வாதிகள் தொடர்ந்தும் ஊழலில் ஈடுபட்டு அதிகரித்த செலவுகளை ஏற்படுத்துகிறார்கள். சில தினங்களுக்கு முன்னர் கூட மகிந்த குழுவினர் வரி செலுத்துவோரின் பணத்தில் கப்பலில் பயணம் செய்து களியாட்டம் நடத்தினார்கள்
பாதுகாப்பு செலவை ஆட்சியாளர்கள் அதிகரித்த நிலையில் வைத்திருப்பதற்கு இலங்கை மீது அந்நிய .நாடுகள் எதுவும் படை எடுக்கவில்லை. வல்லரசுகள் இலங்கை மீது படையெடுக்க தேவையுமில்லை. ஏனென்றால் இலங்கை மக்களை சுரண்டி வல்லரசுகளுக்கு வருமானம் தரக்கூடிய அனைத்து வியாபாரங்களுக்கும் ஒத்துழைக்க ஆட்சியாளர்கள் தயாராக இருக்கின்றனர் .
அப்படி இருந்தும் அதிகரித்த பாதுகாப்பு செலவு ஏன் ஏற்படுகிறது என்ற கேள்விக்கான பதிலை தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள ஆயுதப்படையினர் மூலமாக அறிந்து கொள்ளலாம். கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளை நேர்மையாக ஏற்றுக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கி இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி ஒன்றுபட்ட இலங்கைக்குள் கௌரவமான ஒரு தீர்வை வழங்குவதன் மூலமாகவே ஆயுதப்படையினரை அங்கிருந்து அகற்ற முடியும்.
எது எப்படி இருந்தாலும் பாதுகாப்பு செலவீனத்தை குறைப்பதாலும் ஊழல் மிக்க அரசியல்வாதிகளில் இருந்து நாட்டை மீட்டு எடுத்தால் மாத்திரமே வைத்தியர்களுக்கு கண்துடைப்புக்காக வழங்கிய தொகையை விட அதிக சம்பள அதிகரிப்பை பெற முடியும் என்பதை அனைத்து அரசாங்க தொழிற்சங்கங்களும் உணரவேண்டும். அந்த நிலை ஏற்படுவதற்கு உரிய அழுத்தத்தை அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து பிரயோகிப்பதே சகல இலங்கையர்களும் தத்தமது சம்பள உயர்வை பெற்றுக்கொள்ளவும் நாட்டை பொருளாதார சீரழிவில் இருந்து நிரந்தரமாக மீட்டெடுக்கவும் உதவும் சாத்தியமான வழியாகும்.
வைத்தியர் முரளி வல்லிபுரநாதன்
நன்றி வீரகேசரி