குழந்தைகளை தத்தெடுப்பது தொடர்பில் டென்மார்க் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
17 தை 2024 புதன் 12:52 | பார்வைகள் : 2640
டென்மார்க் மக்கள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மிகவும் ஆர்வமுடையவர்கள் இந்நிலையில் குழந்தைகள தத்தெடுப்பது தொடர்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டென்மார்க் மக்கள் இனி வெளிநாடுகளில் இருந்து குழந்தைகளை தத்தெடுக்க முடியாது என நாட்டின் ஒரே ஒரு தத்தெடுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
முறைகேடுகள் தொடர்பான புகார்கள் எழுந்த நிலையிலேயே அந்த நிறுவனம் தங்களது செயல்பாடுகளை நிறுத்தியுள்ளது.
DIA என அறியப்படும் Danish International Adoption என்ற அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவகாரம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், DIA மீது முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்த 6 நாடுகளில் இருந்து தத்தெடுக்கும் உரிமையை டென்மார்க்கின் சமூக விவகார அமைச்சகம் இடைநீக்கம் செய்த நிலையிலேயே, அந்த நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
செக் குடியரசு, இந்தியா, பிலிப்பைன்ஸ், தென்னாப்பிரிக்கா, தைவான் மற்றும் தாய்லாந்து ஆகிய 6 நாடுகளிலேயே முறைகேடுகள் நடந்ததாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
சாத்தியமான முறைகேடு பற்றிய கவலைகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு மடகாஸ்கரில் இருந்தும் தத்தெடுப்புகளை DIA நிறுத்தியது.
டென்மார்க்கின் தற்போதைய நிலைமைகளின் கீழ், எங்களைப் போன்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் சர்வதேச தத்தெடுப்புகளை நடத்தப்பட முடியாத சூழல் உருவாகியுள்ளது என்று அந்த அறிக்கையில் DIA சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், தற்போது 36 குழந்தைகளை தத்தெடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், ஆனால் அது தொடர்பான விவரங்களை வெளியிட மறுத்துள்ளது.
2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் சமீபத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில், டென்மார்க் மக்கள் வெளிநாடுகளில் இருந்து தத்தெடுக்கும் நிலை 10 மடங்கு அதிகரித்துள்ளது.
இதனிடையே, கடந்த டிசம்பர் மாதம் பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து தத்தெடுக்கும் நடவடிக்கைகளை நார்வே அரசாங்கமும் முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.
பல சட்டவிரோத தத்தெடுப்பு வழக்குகள் உள்ளூர் ஊடகங்களில் வெளிவந்த நிலையிலேயே நார்வே நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.
மேலும், ஜனவரி முதல் தென் கொரியாவில் இருந்தும் பிள்ளைகளை தத்தெடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.