ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., கடிதம்
18 தை 2024 வியாழன் 02:20 | பார்வைகள் : 1699
ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு, எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசின் உயர்நிலை குழுவுக்கு, தி.மு.க., கடிதம் எழுதியுள்ளது.
அக்கடிதத்தின் விபரம்:
சட்ட ஆணையம் ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்த தி.மு.க.,வின் கருத்துக்களை கோரியது. இதற்கு தி.மு.க., ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தற்போது பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளோடு நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் இணைத்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஆய்வு வரம்புகளை வெளியிட்டு உள்ளது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு முற்றிலும் எதிரானது. சட்ட சபைகளை முன் கூட்டியே கலைப்பது அரசியல் சட்ட விரோதமானது என்பதால் தி.மு.க., எதிர்க்கிறது.
மத்திய ஆளுங்கட்சியும் பெரும்பான்மையை இழந்தால் ஆட்சி கவிழும். அதுபோன்ற நிகழ்வில், ஒரே நேரத்தில் தேர்தல் என்ற முன்னெடுப்புக்கு மீண்டும் இடையூறு ஏற்படும்.
ஒரே தேர்தல் என்பது தேசிய கட்சிகளுக்கும், மாநில கட்சிகளுக்கும் இடையே தேர்தல் களத்தில் சம நிலையிலான போட்டியை ஏற்படுத்தித் தராது.
தேர்தல் ஆணையர் எண்ணிக்கை, தேர்தல் அதிகாரிகளின் எண்ணிக்கை, கட்டமைப்பு அதிகரிக்க வேண்டும் என்பதால் கட்டுக்கடங்காத செலவினத்தை ஏற்படுத்தும்.
உள்ளாட்சி, சட்டசபை, லோக்சபா தேர்தலை நடத்த ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் செலவிட வேண்டிய நிதி சுமை தேர்தல் ஆணையத்திற்கு ஏற்படும்.
இது மத்திய, மாநில அரசு உறவுகளில் மட்டுமல்ல, மத்திய அரசுக்கே, கடுமையான விளைவு களை ஏற்படுத்தும் ஆபத்தான முயற்சி.

உயர்நிலை குழு, தன் விசாரணையை நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால், சட்டத்தின் வழி கொண்டு பொருத்தமான நடவடிக்கையை தி.மு.க., எடுக்கும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாநில கட்சிகளை பலவீனப்படுத்தும்
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' உயர்நிலைக்குழு செயலர் நிதேன் சந்திராவுக்கு பா.ம.க., தலைவர் அன்புமணி அனுப்பிய கடிதம்: கடந்த, 1972 வரை லோக்சபாவுக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பின், 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதை சரிசெய்ய முடியவில்லை. 1994ல் எஸ்.ஆர் பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, அரசியலமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவை பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைப்பது சாத்தியமற்றதாகி விட்டது.
அரசுகள் கவிழ்வதையும், தேவையில்லாமல் தேர்தல் நடத்துவதையும் தவிர்க்க, தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெறும் ஓட்டுகளின் அடிப்படையில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை நியமிக்கும் விகிதாச்சார பிரதிநித்துவ முறையே நிரந்த தீர்வாக இருக்க முடியும். இது ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கும் வலு சேர்க்கும்.லோக்சபா தேர்தலையும், சட்டசபை தேர்தலையும் ஒன்றாக நடத்தினால் தேசிய அளவிலான பிரச்னைகள் தான் முதன்மைப்படுத்தப்படும். இது, தேசிய கட்சிகளுக்கு கூடுதல் வலிமையையும், மாநில கட்சிகளுக்கு பலவீனத்தையும் ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.