இலங்கையில் உச்சம் தொடுகிறது தேங்காய் விலை
18 தை 2024 வியாழன் 07:41 | பார்வைகள் : 1880
இலங்கையில் கடந்த சில நாட்களாக தேங்காய் விலை அதிகரித்து வருவதாக தெங்கு விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
”தென்னை அபிவிருத்திச் சபையின் கூற்றுப்படி, ஆண்டு முழுவதும் சுமார் 1500 மிமீ மழைவீழ்ச்சியும், சுமார் 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் தென்னை அறுவடைக்கு தேவை.
ஆனால், கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் மிகவும் வறண்ட வானிலையும் காணப்பட்டது. மோசமான வானிலையால் தென்னை அறுவடை குறைந்துள்ளது.
அறுவடை குறைந்துள்ளமையால் தேங்காய் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. எதிர்வரும் மே மாதத்திற்குள் படிப்படியாக இந்த நிலை சீராகும் என தென்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தேங்காய் அறுவடை குறைந்துள்ளமையால் சந்தையில் தேங்காய்க்கான கேள்வி அதிகரித்துள்ளது. இதனால் 70, 80 ரூபாவாக இருந்த சிறிய தேங்காய் ஒன்றின் விலை தற்போது 100 ரூபாவை எட்டியுள்ளது.
100 ரூபா அல்லது அதற்கு மேலதிகமாக விற்பனை செய்யப்பட்ட பெரிய தேங்காய் ஒன்றின் விலை தற்போது 120 ரூபாவை தாண்டியுள்ளது. எதிர்காலத்தில் இதனையும் விட விலைகளில் அதிகரிப்பு ஏற்படும் என தென்னை விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.