ராமர் கோவில் கட்ட நிதி தமிழகத்துக்கு 3ம் இடம்
20 தை 2024 சனி 01:32 | பார்வைகள் : 1580
அயோத்தி ராமர் கோவில் கட்ட நிதி வழங்கியதில், இந்திய அளவில் தமிழகம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது, என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கோவில்களில் துாய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோவிலில் நேற்று கூட்டி தூய்மைப்படுத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் வேண்டுகோள் படி வரும் 22ம் தேதி வரை நான்கு நாட்கள் பா.ஜ., சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என, 5,000 வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.
இந்தியாவில் உள்ள துாய்மை நகரங்கள் வரிசையில் தமிழகம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
பல்லாவரம் எம்.எல்.ஏ., மகன் வீட்டு பணிப்பெண் புகாருக்கு நடவடிக்கை எடுப்பதில் போலீஸ் தரப்பில் தயக்கம் இருக்கிறது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பா.ஜ. களத்தில் இறங்கி போராடும்.
தமிழக கவர்னர் எந்தவிதத்தில் தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார் என்று முதல்வர் சொல்ல வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கவர்னர் மீது குற்றஞ்சாட்டுவது, அவரது பணியாக உள்ளது. எந்த குற்றமும் செய்யாத சேலம், பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகந நாதன் வீட்டில் ரெய்டு நடத்தி, அவரை கைது செய்து, ஆறு மணிநேரம் சுற்றவிட்டனர்.
எங்கள் பேச்சை கேட்காவிட்டால் அனைத்து துணைவேந்தர்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும் என எச்சரிக்கை விடுவது போல இந்த சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தில் தி.மு.க.,வின், 32 மாத ஆட்சியை மக்கள் பார்க்கின்றனர். அந்த ஆட்சிக்கான எதிர்ப்பு, மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்ற எண்ணத்தால் பா.ஜ., பெரும் எழுச்சியை சந்திக்கும்.
அயோத்தியில் ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டைக்கு முன் தமிழக கோவில்களுக்கு பிரதமர் வந்து செல்வதே நமக்கு பெருமை. உதயநிதி சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் சிறப்பான முறையில் அவர் நடித்திருக்கிறார். பத்திரிகையாளர் சந்திப்பு என்றால், பா.ஜ. தலைவர்கள் மேற்கொள்ளும் சந்திப்பை அவர் பார்க்க வேண்டும்.
மசூதியை இடித்து விட்டு ராமர் கோவில் கட்டியதை எதிர்க்கிறோம் என உதயநிதி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தால் அனுமதி அளிக்கப்பட்டு, மக்கள் நிதியால் ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒருவர் மட்டும், 25 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார். அக்கோவில் கட்டுவதற்கு அதிக நிதி கொடுத்த மாநிலங்கள் வரிசையில், தமிழகம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. இதையும் தெரிந்து கொண்டு, அதன்பின் உதயநிதி ராமர் கோவில் நிர்மாணம் குறித்து பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.