இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் சுகாதார பிரிவு
20 தை 2024 சனி 09:38 | பார்வைகள் : 1607
இன்புளுவென்சா போன்ற நோய்கள் வழமைக்கு மாறாக அதிகரித்து வருவதையடுத்து காய்ச்சல், இருமல், தொண்டை புண், சளி அல்லது அடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதர நிபுணர்கள் பொது மக்களை வலியுறுத்தியுள்ளனர்.
இதன்படி, நவம்பர் மாதம் முதல் பெப்ரவரி மாதம் வரையிலும், ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலும் இன்புளுவென்சா வைரஸ் இரண்டு உச்சநிலையில் உள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசகர் வைத்தியர் ஜூட் ஜயமஹா (Jude Jayamaha) தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், கடந்த டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் பெறப்பட்ட மாதிரிகளின்படி, 25 வீதம் இன்புளுவென்சா வைரஸ் தோற்று கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு, ராகம, களுபோவில, நீர்கொழும்பு வைத்தியசாலைகள், சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலை மற்றும் தொற்று நோய் வைத்தியசாலை உட்பட 20 வைத்தியசாலைகளில் இன்புளுவென்சா போன்ற நோய் குறித்த கண்காணிப்பை அதிகரிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன், இன்புளுவென்சா போன்ற நோய்களால் பாதிக்கப்படக்கூடிய குழுக்களில் கர்ப்பிணித் தாய்மார்கள், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.