காசாவில் இஸ்ரேலிய படையினரின் அட்டூழியம் - அழிக்கப்பட்ட 16 மயானங்கள்
20 தை 2024 சனி 10:19 | பார்வைகள் : 2680
இஸ்ரேலானது காசா பிரதேசத்தின் மீது பாரிய தாக்கங்களை மேற்கொண்டு வருகின்றது.
காசாவில் இஸ்ரேலிய படையினர் 16க்கும் மேற்பட்ட மயானங்களை அழித்துள்ளதை காண்பிக்கும் வீடியோக்கள் கிடைத்துள்ளதாக சிஎன்என்னின் விசாரணைகளின் போது இது தெரியவந்துள்ளது.
கல்லறைக்கற்கள் அழிக்கப்பட்டுள்ளன மண் கிளறப்பட்டுள்ளது சில சந்தர்ப்பங்களில் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன என சிஎன்என் தெரிவித்துள்ளது.
இந்த வாரம் மோதல்கள் தீவிரமடைந்துள்ள கான்யூனிசில் இஸ்ரேலிய படையினர் மயானத்தை அழித்து உடல்களை தேடியுள்ளனர்.
ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையின் ஒருபகுதியாக இதனை முன்னெடுத்துள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
கல்லறைகள் அழிக்கப்பட்டுள்ளதை காண்பிக்கும் செய்மதி படங்களையும் சமூக ஊடக படங்களையும் ஆராய்ந்துள்ளதாக தெரிவித்துள்ள சின்என் இஸ்ரேலிய படையினருடன் அவர்களின் வாகனதொடரணியில் பயணித்தவேளை இதனை அவதானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
காசாவை நோக்கி முன்னேறும் போது திட்டமிட்ட முறையில் இதனை இஸ்ரேலிய படையினர் முன்னெடுத்துள்ளமை தெரியவருவதாக சிஎன்என் குறிப்பிட்டுள்ளது.
கல்லறைகள் மயானங்களை அழிப்பது சர்வதேச சட்டங்களை மீறும் நடவடிக்கை என்பதையும் சிஎன்என் சுட்டிக்காட்டியுள்ளது. சட்டநிபுணர்கள் இஸ்ரேலின் நடவடிக்கை யுத்தகுற்றங்களிற்கு சமமானது என தெரிவிக்கின்றனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது.
16 மயானங்கள் அழிக்கப்பட்டமைக்கு பொறுப்பேற்க முடியாது என தெரிவித்துள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு படை பேச்சாளர் சிலவேளைகளில் ஹமாஸ் இராணுவநோக்கங்களிற்காக பயன்படுத்தும் மயானங்களை அழிப்பதை தவிரவேறுவழியில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பணயக்கைதிகளை மீட்பதும் அவர்களின் உடல்களை கண்டுபிடிப்பதும் தங்களின் முக்கியமான நோக்கம் இதன் காரணமாகவே மயானங்களில் தேடுகின்றோம் என இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
பணயக்கைதிகள் உடைய உடல்கள் இல்லை என தீர்மானிக்கப்பட்ட உடல்களை உரிய மரியாதையுடன் மீண்டும் புதைக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய படையினர் மயானங்களை இராணுவநோக்கங்களிற்காகவும் பயன்படுத்தியுள்ளனர். இஸ்ரேலிய படையினர் பெருமளவு மயானங்களை புல்டோசர்களை கொண்டு அழித்து புதிய நிலைகளை ஏற்படுத்தி அங்கு தங்களை பலப்படுத்திக்கொண்டுள்ளதை செய்மதி படங்கள் காண்பித்துள்ளன எனசிஎன்என் தெரிவித்துள்ளது.
காசாவின் சஜாயா பகுதியில் முன்னர் மயானங்கள் காணப்பட்ட பகுதியில் இஸ்ரேலின் இராணுவவாகனங்கள் காணப்படுகின்றன மயானத்தின் மத்திய பகுதி யுத்தத்திற்கு முன்னரே துப்பரவு செய்யப்பட்டது என உள்ளுர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன
ஆனால் புதிதாக அஙகு புல்டோசரை பயன்படுத்தி துப்புரவு இடம்பெற்றுள்ளதையும் இஸ்ரேலிய படையினர் காணப்படுவதையும் செய்மதி படங்கள் காண்பித்துள்ளன என சிஎன்என் தெரிவித்துள்ளது.