Paristamil Navigation Paristamil advert login

இன்று திமுக இளைஞரணி மாநில மாநாடு.. சேலத்தில் குவிந்த தொண்டர்கள்

இன்று திமுக இளைஞரணி மாநில மாநாடு.. சேலத்தில் குவிந்த தொண்டர்கள்

21 தை 2024 ஞாயிறு 03:11 | பார்வைகள் : 1956


தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடக்கிறது. இளைஞர் அணி தொடங்கப்பட்ட பிறகு முதல் மாநாடு கடந்த 2007-ம் ஆண்டு நெல்லையில் நடந்தது. தற்போது 2-வது மாநாடு சேலத்தில் நடக்கிறது. இந்த மாநாட்டுக்காக சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்தநாயக்கன்பாளையம் அருகில் சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டின் நிகழ்ச்சிகள் விவரம்:-

மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக காலை 9 மணிக்கு கட்சி கொடியேற்றப்படுகிறது. கொடியை தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி ஏற்றி வைக்கிறார். காலை 9.30 மணிக்கு வரவேற்புக்குழு தலைவர் இளைஞரணி துணை செயலாளர் எஸ்.ஜோயல் வரவேற்று பேசுகிறார்.

9.45 மணிக்கு மாநாட்டு தலைவராக உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்யப்படுகிறார். 10 மணிக்கு மாநாட்டு ஒருங்கிணைப்பாளரும், கட்சியின் முதன்மை செயலாளருமான அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றுகிறார். தொடர்ந்து 10.15 மணிக்கு மொழிப்போர் தியாகிகள் உருவப்படங்கள் திறந்து வைக்கப்படுகின்றன. மாநாட்டு திறப்பாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. பேசுகிறார்.

மாநாட்டில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை இளைஞரணி கண்ட களங்கள், திராவிட மாடல்- எல்லோருக்கும் எல்லாம் உள்ளிட்ட 22 தலைப்புகளில் கட்சி நிர்வாகிகள் கருத்துரை வழங்குகின்றனர். மாலை 5.30 மணி அளவில் கனிமொழி எம்.பி. பேசுகிறார்.

மாலை 6.30 மணிக்கு இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு தலைவருக்கான உரையாற்றுகிறார். 6.45 மணிக்கு பொருளாளர் டி.ஆர்.பாலு வாழ்த்தி பேசுகிறார். இரவு 7 மணிக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் சிறப்புரையாற்றுகிறார். 7.30 மணிக்கு விழா நிறைவு பேரூரையாக முதல்- அமைச்சரும், கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்

இதற்கிடையே மாநாட்டில் சிறப்பு நிகழ்வுகளாக மாநாட்டு மலர், 10 பாசறை நூல்கள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். தொடர்ந்து மாநாட்டில் கட்சியின் மூத்த முன்னோடிகள் மரியாதை செய்யப்படுகிறார்கள். நீட் விலக்கு நம் இலக்கு தபால் அட்டை ஒப்படைக்கப்படுகிறது.

மாநாட்டு முகப்பு தோற்றம் மலை முகடு போன்றும், அரண்மனையின் கோட்டை சுவர், தர்பார் மண்டபம், பல்வேறு வகையான ஜரிகைகள், அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மாநாட்டில் பெரியார் நுழைவு வாயில், அண்ணா திடல், கலைஞர் அரங்கம், பேராசிரியர் மேடை, வீரபாண்டியார் கொடி மேடை, முரசொலிமாறன் புகைப்பட கண்காட்சி என ஒவ்வொரு தலைவர்களையும் கவுரவித்துள்ளனர். மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் பஸ்கள், வேன்கள், கார்கள், இருசக்கர வாகனங்களில் வந்து குவிந்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்