இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் - ஈரான் அதிபர்
21 தை 2024 ஞாயிறு 13:21 | பார்வைகள் : 3091
இஸ்ரேல் மீது பல நாடுகள் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது.
இந்நிலையில் சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உறுதியளித்துள்ளார்.
இந்த வான்வழி தாக்குதலில் சிரியாவில் இராணுவ ஆலோசனைப் பணியில் ஈடுபட்டிருந்த ஈரானிய புரட்சி காவல் படையின் மூத்த அதிகாரிகள் 5 பேர் கொல்லப்பட்டதுடன் சிரிய படையினர் பலரும் உயிரிழந்தனர்.
வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் நடத்தியதாக ஈரான் குற்றம்சாட்டுகிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க இஸ்ரேலிய இராணுவம் மறுத்துவிட்டது.
தாக்குதலில் உயிரிழந்த ஈரான் இராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிபர் இப்ராஹிம் ரைசி, பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் தொடர்புடைய சிரிய இலக்குகள் மீது பல ஆண்டுகளாக இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருவது அனைவரும் அறிந்த உண்மை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.