அயோத்தி ராமர் கோயிலில் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு நடந்தது என்ன?
22 தை 2024 திங்கள் 08:22 | பார்வைகள் : 2261
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி காலை 11 மணியளவில் விமான மூலம் அயோத்தி நகர் வந்து சேர்ந்தார். இந்த விழாவிற்கு அனுமதிக்கப்பட்டிருந்த 7,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் முன்னதாக கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு அமர வைக்கப்பட்டனர்.
பட்டு வேட்டி சட்டையில் கோயிலுக்குள் வந்த மோடி தனது கையில் குழந்தை ராமருக்கான வஸ்திரம் மற்றும் சிறிய குடை ஆகியவற்றை ஏந்தி வந்தார். இதைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதற்காக பல திரைப்பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் நடிகர் ரஜினிகாந்தும் ஒருவர். இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக நேற்று அவர் தனது மனைவி லதா, அண்ணன் சத்யநாராயணா மற்றும் பேரன்களுடன் அயோத்தி சென்றார். இவருடன் நடிகர் தனுஷூம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், நடிகர் ரஜினிகாந்த் விஐபிகளுக்கு ஒதுக்கப்பட்ட வரிசையில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். ஆனால், அவருடன் அவரது மனைவி, அண்ணன், பேரன்கள் என யாரும் இல்லை.
முன்வரிசையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர் அம்பானி ஆகியோர் இருந்தனர். முதல் வரிசையில் தன்னுடைய குடும்பத்தினர் அமர அனுமதி மறுக்கப்பட்டதை கவனித்த ரஜினிகாந்த் அங்கிருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து பேசிய பின்னர் அவர்களுக்கு விஐபி ஏரியாவில் அமர இருக்கைகள் ஒதுக்கப்பட்டன.
இதையடுத்து அவரது குடும்பத்தார் உள்ளே வந்து ரஜினிகாந்த் அருகே அமர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தி ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.