சாம்பார்
22 தை 2024 திங்கள் 08:37 | பார்வைகள் : 2050
சாம்பார் என்பது பருப்பு மற்றும் வகைவகையான காய்கறிகளால் செய்யப்பட்டும் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டின் பாரம்பரிய மிக்க உணவு வகை.
இது பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்யப்படுவதால் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்து ஆகும். எல்லாவிதமான டிபன் வகைகளுடனும் சுவையாக இருக்கும்.
இட்லி, தோசை, பொங்கல், உப்புமா, வடை ஆகியவற்றுடன் இந்த சாம்பார் பரிமாறப்படுகிறது.அப்படிப்பட்ட சுவைமிகுந்த ஆரோக்கியமான சாம்பாரை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்று இங்கே காணுங்கள்…
தேவையான பொருட்கள் :
துவரம்பருப்பு - 1/4 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
சின்ன வெங்காயம் - 10
உருளைக் கிழங்கு - 1
தக்காளி - 2
கத்தரிக்காய் - 1
கேரட் - 1
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டீ ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் - 8
கொத்தமல்லி இலை - சிறிதளவு எண்ணெய்
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க தேவையான பொருட்கள் :
கடுகு - 1 டீ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீ ஸ்பூன்
சோம்பு - 1 டீ ஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் புளியை சேர்த்து ஊறவைத்து கரைத்து கரைசலை வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.
அடுத்து அடுப்பில் பாத்திரத்தை வைத்து நன்றாக கழுவிய துவரம்பருப்பு, பாசிப்பருப்பை மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பிறகு அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து எண்ணெய்விட்டுச் சூடானதும் தாளிக்க எடுத்து வைத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தாளித்து கொள்ளவும்.
பின்னர் தாளிப்புடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
சின்ன வெங்காயம் நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி, நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு சுவைக்கேற்ப சாம்பார் பொடி சேர்த்து அதனுடன் ஓரளவிற்கு துண்டாக நறுக்கிய கேரட், கத்தரிக்காய், உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
காய்கள் நன்கு வெந்ததும் வேகவைத்து எடுத்து வைத்துள்ள பருப்பை சேர்த்து ஒரு கொதி கொதிக்க விடவும்.
கடைசியாக இட்லி சாம்பாரை இறக்குவதற்கு முன் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும்.
அவ்வளவுதான் சுவையான சாம்பார் ரெடி…இதை நீங்கள் சூடான இட்லி மற்றும் தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.