இஸ்ரேல் பணயக்கைதிகள் இனி நாடு திரும்ப வாய்ப்பில்லை - ஹமாஸ் திட்டம்

22 தை 2024 திங்கள் 09:23 | பார்வைகள் : 7987
இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தரப்பு முன்வைத்த நிபந்தனைகள் ஏற்கப்படாத நிலையில், அவர்கள் இனி நாடு திரும்ப வாய்ப்பில்லை என ஹமாஸ் படைகள் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்த நிபந்தனை முன்வைக்கப்பட்டதையும் பிரதமர் நெதன்யாகு நிராகரித்திருந்தார்.
அதில் காஸா பகுதியில் ஹமாஸ் தரப்பின் ஆட்சி தொடரும் என்றும் பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேல் ராணுவம் உட்பட அனைவரும் வெளியேற வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஹமாஸ் அதிகாரியான Sami Abu Zuhri என்பவர் தெரிவிக்கையில், காசாவில் இராணுவத் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலியப் பிரதமர் மறுத்திருப்பது, சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் இஸ்ரேல் திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை என்பதாகும் என்றார்.
காஸாவில் 130 பணயக்கைதிகள் எஞ்சியிருக்கலாம் என்று நம்பப்பகுகிறது. இஸ்ரேல் பணயக்கைதிகள் தொடர்பில் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டு வரும் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் முன்வைத்துள்ள கோரிக்கைகள் ஏற்புடையதாக இல்லை என்றார்.
காஸாவில் இருந்து ராணுவத்தை வெளியேற்றவும், கொலைகாரர்கள் மற்றும் துஸ்பிரயோகிகளை விடுவிக்கவும் ஹமாஸ் கோருவதாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் கொடூரர்களிடம் சரணடைய முடியாது என்றே முடிவு செய்திருக்கிறேன் என்றார் நெதன்யாகு.
இந்நிலையில் ஞாயிறன்று பிற்பகல் இஸ்ரேல் பணயக்கைதிகளின் குடும்பத்தினர் ஜெருசலேமில் உள்ள பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டிற்கு வெளியே மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் வரையில் இந்த ஆர்ப்பாட்டம் தொடரும் என்றே பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பிரதமர் நெதன்யாகு பணயக்கைதிகளை தியாகம் செய்ய முடிவு செய்தால், அவர் இஸ்ரேலிய பொதுமக்களுடன் நேர்மையாக தனது நிலையை பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.