தலைவரான சிறீதரன் - பாராளுமன்றில் இன்று ஆற்றிய உரை
23 தை 2024 செவ்வாய் 16:03 | பார்வைகள் : 1969
நிகழ்நிலை காப்புச் சட்டம் மக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுவரும் நிகழ்நிலை காப்புச் சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய சிவஞானம் சிறிதரன்,
கடந்த 80 வருடங்களாக நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் காணப்படாமையால்தான் மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் இவ்வாறான சட்டங்களை கொண்டுவரும் தேவை எழுந்துள்ளது.
இனப்பிரச்சினைக்கான தீர்வை நாட்டின் தலைவர்கள் தள்ளிப் போட்டே வந்துள்ளனர். நாட்டின் தலைவராகும் நபர்கள் எதிர்க்கட்சிகளில் இருக்கும் போது ஒன்றையும் ஆளுங்கட்சிக்கு வரும்போது மாற்றி பேசுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
சமாதானம் என்பது எமது நாட்டில் இன்னமும் வெகுதூரத்தில்தான் இருக்கிறது. அதனை பெற்றுத்தரக் கூடிய திராணி உள்ள தலைவர்களை மக்கள் இன்னமும் தேடுகின்றனர். மக்களின் கருத்து சுதந்திரத்தைக் கூட பறிக்கும் ஒரு சட்டமாக நிகழ்நிலை காப்புச் சட்டம் உள்ளது.
இது மிகவும் ஆபத்தான சட்டமாக உள்ளது. ஒரு நபரின் ஜனநாயக உரிமையை பறிக்கும் சட்டமாக இது உள்ளது. நாட்டு மக்களின் மீது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் ஒரு சட்டமாகவும் இது உள்ளது. இந்தச் சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிடுகிறோம்.
தொலைக்காட்சி மற்றும் வானொளிகளை விட தொலைபேசிகளில் தமது ஈடுபாடுகளை அதிகரித்துள்ள ஒரு இளைய தலைமுறை உருவாகியுள்ளது. 1978ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்ட போது இதனை சிங்கள மக்கள் புரிந்துக்கொள்ளவில்லை.
'அரகலய' போராட்டத்தின் பின்னரே இந்தச் சட்டத்தின் கொடூரத்தை அறிந்துக்கொண்டனர். கண்ணை மூடிக்கொண்டு சட்டங்களை அரசாங்கங்கள் கொண்டுவரக் கூடாது. சமாதானத்தை ஏற்படுத்தும் சட்டங்களையே கொண்டுவர வேண்டும்.‘‘ என்றார்.