இலங்கையில் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் சட்டம் நிறைவேற்றம்!
24 தை 2024 புதன் 15:00 | பார்வைகள் : 2670
சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களில் பரப்பப்படும் போலிச் செய்திகளை கட்டுப்படுத்தும் நிகழ்நிலை காப்புச் சட்டம் (online safety bill) இலங்கை பாராளுமன்றத்தில் இன்று மாலை (24) 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய எதிர்க்கட்சிகளான தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகள் எதிராக வாக்களித்தன.
நிகழ்நிலை காப்புச் சட்டம் மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. உத்தேச திருத்தச்சட்டம் இரண்டாம் வாசிப்புக்காக நேற்று பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், சட்டமூலம் மீதான இன்றைய இறுதிநாள் விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆதரவான மற்றும் எதிரான கருத்துகளை வெளியிட்டன.
இறுதியில் சட்டம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. நிகழ்நிலை காப்புச் சட்டத்துக்கு சபாநாயகர் அங்கீகாரம் அளித்ததும் நடைமுறைக்கு வரும். சட்டம் நடைமுறைக்கு வந்ததும் சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களில் பகிரப்படும் போலி செய்திகள் மற்றும் சேறுபூசும் செய்திகள் தொடர்பில் சட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஆணைக்குழு கண்காணிப்புகளை நடத்தும்.
குற்றம் உறுதி செய்யப்பட்டால் அதிகபட்ச தண்டனையாக 5 வருடங்கள் குற்றவாளிக்கு தண்டனை அளிக்க முடியும்