Paristamil Navigation Paristamil advert login

பிரதமர் மோடிக்கு நிதிஷ் குமார் நன்றி...!! கூட்டணியில் மீண்டும் சலசலப்பு

பிரதமர் மோடிக்கு நிதிஷ் குமார் நன்றி...!!  கூட்டணியில் மீண்டும் சலசலப்பு

24 தை 2024 புதன் 15:36 | பார்வைகள் : 1683


பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறார்.  இதற்காக பல்வேறு தலைவர்களையும் நேரில் சந்தித்து, ஆலோசனைகளையும் மேற்கொண்டார்.  இதனை தொடர்ந்து, இந்தியா கூட்டணி உருவானது.

2022-ம் ஆண்டு ஆகஸ்டில், பா.ஜ.க.வை கைவிட்டு விலகிய நிதிஷ் குமார், பின்பு அனைத்து எதிர்க்கட்சியினரையும் சந்தித்து, ஒரு வலிமையான எதிர்க்கட்சி கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.  அதனுடன், காங்கிரஸ் இன்றி எந்தவொரு கூட்டணியும் சாத்தியமில்லை என்றும் அவர் சுட்டி காட்டி பேசினார்.

இதன்பின், 2023-ம் ஆண்டு ஜூனில் எதிர்க்கட்சி தலைவர்கள் அடங்கிய கூட்டமொன்று பாட்னா நகரில் நடந்தது.  தொடர்ந்து, பெங்களூரு மற்றும் மும்பையில் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அதன்பின்னர் அந்த கூட்டணியில் பெரிய முன்னேற்றத்திற்குரிய நிகழ்வுகள் காணப்படவில்லை.  பிரதமர் வேட்பாளர் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.  தொகுதி பங்கீடு, அவற்றில் கட்சிகளிடையே உடன்பாடு உள்ளிட்ட விவரங்கள் முடிவு எட்டப்படாமல் உள்ளன.

இந்தியா கூட்டணியில் அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என ஒவ்வொரு கூட்டணி கட்சியினரும் கோரி, தொகுதி பங்கீட்டில் முழுமையான முடிவு எட்டப்படாமல் காணப்படுவது அரசியல் அரங்கில் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், பீகார் கவர்னர் அர்லேகரை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரியுடன் சென்று நிதிஷ் குமார் சந்தித்தது அரசியலில் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

இந்த நிலையில், முன்னாள் முதல்-மந்திரி மற்றும் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு இயக்கத்தின் முக்கிய நபராக அறியப்படும் கர்பூரி தாக்குருக்கு அவரது மறைவுக்கு பின்னர், பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.  இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.  இதற்காக பிரதமர் மோடிக்கு பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் இன்று நன்றி தெரிவித்து கொண்டார்.

அதனுடன், காங்கிரஸ் கட்சியையும் அவர் சாடினார்.  அவர்கள் ஆட்சி காலத்தில் கர்பூரி தாக்குருக்கு விருது அறிவிக்கப்படாததற்காக கடுமையாக கடிந்து கொண்டார்.  தொடர்ந்து நிதிஷ் கூறும்போது, கர்பூரி தாக்குர் ஒருபோதும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை, அவருடைய கட்சியில் ஊக்குவித்தது கிடையாது என்றும் கூறினார்.  இதனால், வாரிசு அரசியலையும் அவர் கடுமையாக சாடியிருக்கிறார்.

இதுபோன்று நிதிஷ் குமார் கூறியிருப்பது, அவருடைய அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.  அவர் கூட்டணியை விட்டு விட்டு, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்ப போகிறாரா? என்ற யூகங்களும் எழுந்துள்ளன.  அவரது இந்த பேச்சு இந்தியா கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்