தற்போதைக்கு அயோத்தி செல்ல வேண்டாம் - மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
25 தை 2024 வியாழன் 01:58 | பார்வைகள் : 1750
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் பிரதிஷ்டை விழா கடந்த 22-ந்தேதி கோலாகலமாக நடைபெற்றது. பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார். இந்த விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அயோத்தியில் பொது தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலில் தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர். பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் பாதுகாவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது மத்திய மந்திரிகள் தற்போதைக்கு அயோத்தி செல்வதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். மந்திரிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செல்லும்போது, தரிசனத்திற்கு செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால், மார்ச் மாதத்தில் மத்திய மந்திரிகள் அயோத்தி செல்ல வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.