Paristamil Navigation Paristamil advert login

உடைந்தது இண்டியா கூட்டணி ?

உடைந்தது இண்டியா கூட்டணி ?

25 தை 2024 வியாழன் 02:27 | பார்வைகள் : 1259


மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சிக்கு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற ஓரம்ச குறிக்கோளுடன் 28 எதிர்க்கட்சிகள் இணைந்து இண்டியா என்ற பெயரில் உருவாக்கிய கூட்டணி, தொகுதிகள் பங்கீடு குறித்து பேச ஆரம்பித்த நிலையில் டமால் என உடைந்துள்ளது.

கடந்த 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களில் வென்று மத்தியில் ஆட்சியை பிடித்த பா.ஜ., ஏப்ரலில் நடக்க இருக்கும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் அடிக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. 

பா.ஜ.,வுக்கு எதிரான ஓட்டுகளை ஒருங்கிணைத்தால் மட்டுமே அக்கட்சியை தேர்தலில் வீழ்த்த முடியும்  என பெரும்பாலான எதிர்க்கட்சிகள் உணர்ந்தன. அதன் விளைவாக 28 கட்சிகள் இடம் பெற்ற இண்டியா கூட்டணி உருவானது. பாட்னா, பெங்களூரு, மும்பை, டில்லியில் இந்த கூட்டணியின் தலைவர்கள் சந்தித்து, அணியை வலுப்படுத்துவது தொடர்பாக விவாதித்தனர்.  ஆனால், பல மாநிலங்களில் இக்கட்சிகள் ஒன்றை ஒன்று தீவிரமாக எதிர்த்து அரசியல் செய்வதால், அவரவர் வலுவாக உள்ள தொகுதிகளை மற்ற கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. 

இதனால் துவக்கத்தில் இருந்தே தொகுதி பங்கீடு விஷயத்தில் உரசல் இருந்து வருகிறது. குறிப்பாக, மேற்கு வங்கம், டில்லி, பஞ்சாப், கேரள மாநிலங்களில் இந்த உரசல் வலுத்து மோதல் நிலைக்கு வந்தது. இந்நிலையில், மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளிலும் திரிணமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என முதல்வர் மம்தா நேற்று அறிவித்தார். அவர் கூறியதாவது:கடந்த தேர்தலில், மேற்கு வங்கத்தில் இரண்டு இடங்களில்தான் காங்கிரஸ் வென்றது. அந்த இரு தொகுதிகளை தர தயாராக இருந்தோம்; அதை காங்கிரஸ் ஏற்கவில்லை. அதிகமாக கேட்கிறது. அதற்கு நாங்கள் சம்மதிக்கவில்லை. 

அந்தந்த மாநிலங்களில் எந்த கட்சி வலுவாக உள்ளதோ அதுதான் பா.ஜ.,வுக்கு எதிராக அதிக தொகுதிகளில் களமிறங்க வேண்டும் என்று ஏற்கனவே கூறியுள்ளோம். அதன்படி, மேற்கு வங்கத்தில் அனைத்து தொகுதிகளிலும் திரிணமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். நாடு முழுதும், 300 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடட்டும். மீதமுள்ள தொகுதிகளில், அந்தந்த பிராந்தியத்தில் வலுவான கட்சிகள் போட்டியிட வேண்டும். 

அதற்கு சம்மதித்து பரஸ்பரம் ஒத்துழைப்பு அளித்தால், தேர்தலுக்கு பின் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக இண்டியா கூட்டணியுடன் விவாதிப்போம்.இவ்வாறு கூறினார். 

ராகுலின் யாத்திரை இன்று மே. வங்கத்துக்குள் நுழைய உள்ள நேரத்தில் மம்தா இப்படி அறிவித்திருப்பது, கூட்டணியில் உள்ள 26 கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அதிர்ச்சி அடையாத மற்றொரு கட்சி ஆம் ஆத்மி. அது ஏற்கனவே பஞ்சாபில் காங்கிரசை ஓரமாக நிறுத்தியிருக்கிறது. மம்தாவை போல ஓப்பனாக அரவிந்த் கெஜ்ரிவால் இன்னும் அறிவிக்கவில்லை. பஞ்சாப் முதல்வர் அதை செய்திருக்கிறார். இதுகுறித்து முதல்வர் பகவந்த் சிங் மான், “மாநிலத்தின் 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும்,” என்றார்.


அவர்களே இடிக்கின்றனர்


இண்டியா கூட்டணி கட்சிகள், மிகுந்த குழப்பத்தில் உள்ளன. ஒவ்வொரு நாளும், தங்களது மாளிகையின் துாண்களை, அவர்களாகவே இடித்து தள்ளுகின்றனர். மம்தாவின் அறிவிப்பு, கூட்டணிக்கான சாவுமணி.ஷெஸாத் பூனாவாலாசெய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்