போலந்தில் அவசர கருத்தடை மருந்துகள் அளிக்க ஒப்புதல்
25 தை 2024 வியாழன் 10:08 | பார்வைகள் : 1891
போலாந்து நாட்டில் அவசர கருத்தடை மருந்துகள் அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மருந்துச் சீட்டு இல்லாமல் அவசர கருத்தடை மருந்துகளை மீண்டும் வழங்குவது தொடர்பான மனுவுக்கு ஒப்புதல் அளிக்க போலந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், கருத்தடை தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
போலந்தின் முன்னாள் தேசியவாத அரசாங்கத்தால் கடந்த 2017 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இந்த மனு மாற்றியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டில் “காலைக்குப் பிறகு” எனும் கருத்தடை மருந்துகளுக்கான அணுகலை வலுக்கட்டாயமாக போலந்தின் முன்னாள் தேசியவாத அரசாங்கம் கட்டுப்படுத்தியது.
மருந்துச் சீட்டு இல்லாமல் குறித்த மருந்துகளுக்கான விற்பனையை அங்கீகரிக்க ஐரோப்பிய ஆணையத்தின் முடிவைத் தொடர்ந்து, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், போலந்தில் ஆளும் கூட்டணி, ஐரோப்பாவில் கருக்கலைப்பு தொடர்பான சில கட்டுப்பாடுகள் உட்பட, முன்னாள் அரசாங்கம் எடுத்த சில முடிவுகளை மாற்றுவதாக உறுதியளித்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயக தரத்திற்கு போலந்தை மீண்டும் கொண்டு வருவது தற்போதைய அரசாங்கத்தின் குறிக்கோள் என டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 15 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மருந்து சீட்டு இல்லாமல் அவசர கருத்தடை மருந்து கிடைக்கும் என அவர் அறிவித்துள்ளார்.
இந்த சட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிப்பார்கள் எனவும் போலந்து அதிபர் இதற்கு ஆதரவாக கையெழுத்திடுவார் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், கர்ப்பத்தின் 12 வது வாரம் வரை கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அவரது கட்சியான சிவில் கூட்டணி தயாராக இருப்பதாகவும் டொனால்ட் டஸ்க் குறிப்பிட்டுள்ளார்.