Paristamil Navigation Paristamil advert login

தேமுதிக ஓட்டுகள் இனி யாருக்கு செல்லும்?

தேமுதிக ஓட்டுகள் இனி யாருக்கு செல்லும்?

28 மார்கழி 2023 வியாழன் 09:21 | பார்வைகள் : 2166


தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து விட்டதால், தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதிக்குப் பிறகு மீண்டும் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் விஜயகாந்த்தும் ஒரு குறிப்பிட்டத்தக்க ஓட்டு சதவீதத்தை தனது கையில் வைத்திருந்தது தான்.

 சினிமா உலகில் இருந்து அரசியலில் குதித்து முதல் வெற்றிக் கொடி நாட்டியவர் எம்ஜிஆர். அவரது மறைவிற்குப் பிறகு சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார் போன்றவர்கள் அரசியலில் ஈடுபட்டாலும் விஜயகாந்த் அளவுக்கு அவர்கள் சாதிக்கவில்லை.

அதற்கு காரணம் விஜயகாந்தை அவரது ரசிகர்கள் கருப்பு எம்.ஜி.ஆர் என்றே நினைத்தார்கள், அழைத்தார்கள். அவர் எம்.ஜி.ஆர் போல பார்ப்பதற்கு இருந்தார் என்று அதற்கு அர்த்தம் அல்ல. குணத்தில் அவர் எம்.ஜி.ஆரை போன்று இருந்தார். எம்.ஜி.ஆரைப் போலவே ஏழை எளிய மக்களிடம் கரிசனம் காட்டினார். திரை உலகில் பலருக்கும் உதவிகள் செய்தார். ரசிகர்களை வைத்து பல நல்ல காரியங்களையும் செய்தார். எல்லாமே எம்.ஜி.ஆரை போல தனது சொந்த காசில் இருந்து செலவழித்தார். இதனால் தான் அவரை கருப்பு எம்.ஜி.ஆர் என்று அழைத்தனர்.

அவரது இந்த நல்ல உள்ளம் தான் அரசியலில் அவருக்கு ஓட்டுகளை பெற்று தந்தது.

தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய பெரும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தனது கட்சியை கொண்டுவர விரும்பினார். ஆனால் அதில் ஒரு வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்பதற்காக தனது கட்சி பெயருடன் "தேசிய" என்ற வார்த்தையையும் சேர்த்துக் கொண்டார். அதாவது தனது கட்சி மற்ற திராவிட கட்சிகளை போன்றது அல்ல; தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்டது என்பதை அவர் சொல்லாமல் சொன்னார்.

மேலும் இன்னொரு தைரியமான முடிவை எடுத்தார் விஜயகாந்த். திராவிட தலைவர்கள் எல்லாம் ஹிந்தியை எதிர்த்துக் கொண்டிருந்தபோது அனைவரும் ஹிந்தி படிப்பது நல்லது. முன்னேற்றத்திற்கு உதவும் என்று வெளிப்படையாக அறிவித்தவர் விஜயகாந்த்.</p><p>இப்படியாக தேசிய திராவிட முன்னேற்ற கழகம் உருவானது. 

திராவிட கட்சிகளை விட இன்னொரு மாற்றத்தையும் அவர் வெளிப்படையாக காட்டினார். பகுத்தறிவு, பகுத்தறிவு என்று மட்டும் பேசாமல் ஆன்மிகவாதியாகவும் அவர் தன்னை காட்டிக் கொண்டார். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் தனது சொந்த ஊரில் உள்ள குலதெய்வத்தின் கோயிலுக்கு சென்று வழிபட்ட பிறகே பிரசாரத்தை துவக்கினார்.

இதன் மூலம் "நான் மற்ற திராவிட தலைவர்களை போன்றவன் அல்ல. தேசியத்தின் மீதும் தெய்வீகத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவன் என்று வெளிப்படுத்தினார்.

இதெல்லாம் சேர்ந்து திராவிட கட்சிகளுக்கு மாற்று ஒன்றை எதிர்பார்த்து இருந்த நடுநிலை வாக்காளர்களும் அவரது ரசிகர்களும் தேமுதிகவை ஆதரிக்க காரணங்களாக அமைந்தன.

 திராவிட கட்சிகளின் கோட்டையில் பெரிய ஓட்டையை போட்டு தனது பக்கம் ஓட்டுகளை ஈர்த்தார். 

தொடர்ந்து தேர்தல்களில் அவரது கட்சி பெற்ற ஓட்டுகளை பார்த்தாலே இது புரியும்.

கட்சி ஆரம்பித்த பிறகு 2011 சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டார். அவரது அந்த துணிச்சல் பலரையும் மலைக்க வைத்தது. 

அப்போது மற்ற பெரிய கட்சிகள் அவரை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்த தேர்தலில் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றாலும் அவரது கட்சி 8.38% ஓட்டுகளை பெற்று மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. இனிமேல் தமிழக அரசியலில் தேமுதிக ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் என்று மற்ற கட்சிகள் அவரை கூட்டணியில் சேர்க்க முடிவு செய்ய வைத்தது.

 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட விஜயகாந்த் 29 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக உருமாறினார். தமிழகத்தின் பெரிய கட்சியாக தன்னை கூறிக் கொள்ளும் திமுக அந்த தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு பலரை வாய் பிளக்க வைத்தது. அந்தத் தேர்தலில் தேமுதிக பெற்ற ஓட்டு சதவீதம் 7.88.

அதிமுகவுடன் பிணக்கு ஏற்பட்ட பிறகு 2016 தேர்தலில் அவர் மக்கள் நல கூட்டணியில் இடம் பெற்றார். அவரது அந்த முடிவு தவறாக அமைந்து எந்த தொகுதியிலும் வெற்றி பெறாமல் 2.39% ஓட்டுகளை மட்டுமே பெற வைத்தது. 2021 தேர்தலில் அமமுக கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 0.43% ஓட்டுகளை பெற்றார். 

இதில் நாம் கவனிக்க வேண்டியது மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்த போதெல்லாம் விஜயகாந்துக்கு ஓட்டுகள் குறைந்தது என்பதைத்தான். ஆனால் அவர் முதலில் தனித்து போட்டியிட்டபோது 8.38% ஓட்டுகள் கிடைத்தன. அப்படி என்றால் இதுதான் விஜயகாந்த்துக்கு உள்ள உண்மையான ஓட்டு சதவீதம்.

இந்த ஓட்டு இனிமேல் யாருக்கு போகும் என்பதுதான் இப்போது மக்கள் முன்புள்ள கேள்வி.

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக விஜயகாந்த் வந்ததால் இந்த ஓட்டுகள் மீண்டும் திராவிட கட்சிகளுக்கு செல்வது சந்தேகமே. மேலும் தெய்வீகத்தையும் விஜயகாந்த் கூடவே கொண்டு வந்ததால் அதன் மீது பற்றுள்ளவர்களும் திராவிட கட்சிகளுக்கு ஓட்டளிப்பார்கள் என்பது இன்னொரு சந்தேகமே.  ஆக, திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக இருக்க வேண்டும்; தேசியத்தையும் தெய்வீகத்தையும் கொள்கைகளாகக் கொண்டிருக்க வேண்டும்.</p><br><p>அப்படிப்பட்ட கட்சிக்குதான் விஜயகாந்த் ஓட்டுகள் மாறும் என்பது நிதர்சனம்.

விஜயகாந்திற்கு பிறகுதான் கட்சி இருக்குமே; அவரது துணைவியார் பிரேமலதா பொதுச் செயலாளராக இருக்கிறாரே என்று நீங்கள் நினைக்கலாம். என்ன இருந்தாலும் அக்கட்சிக்கு ஓட்டளித்தவர்கள் விஜயகாந்திற்காகத்தான் ஓட்டளித்தார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. 

தேமுதிகவின் இந்த சில சதவீத ஓட்டுகள் அடுத்த தேர்தலில் பெரிய மாற்றத்தைக் கூட ஏற்படுத்தலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்